ரூ.1.5 லட்சம் பட்ஜெட்டில் எது கெத்து? யமஹா XSR 155 அல்லது ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350? இன்ஜின், மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி பார்ப்போம்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிளாசிக் மற்றும் ரெட்ரோ வடிவமைப்பு கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு இந்தியச் சந்தையில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ள யமஹா XSR 155 (Yamaha XSR 155) மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) ஆகிய 2 பிரபல மோட்டார்சைக்கிள்களின் சிறப்பம்சங்கள், செயல்திறன் மற்றும் விலை உள்ளிட்ட விவரங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
25
இன்ஜின் & செயல்திறன்
யமஹா XSR 155 பைக்கானது கிளாசிக் தோற்றத்துடன் நவீன ஸ்போர்ட்டி பெர்ஃபாமன்ஸை விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப், செதுக்கப்பட்ட எரிபொருள் தொட்டி மற்றும் மினிமலிஸ்டிக் வடிவமைப்புடன் இது கண்களைக் கவரும் வகையில் உள்ளது. மறுபுறம், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மாடலானது காம்பாக்ட் வடிவம், வட்டமான ஹெட்லேம்ப் மற்றும் கிளாசிக் ரோடுஸ்டர் பாணியில் நகர்ப்புறப் பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
யமஹா XSR 155: இதில் 155சிசி லிக்யூடு-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது விவிஏ (VVA) தொழில்நுட்பத்துடன் இணைந்து 18.4 பிஎஸ் பவரையும், 14.2 என்எம் டார்க்கையும் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸையும் கொண்டுள்ளது. இது அதிக ஆர்.பி.எம்-களில் அதிரடியான வேகத்தையும் சுறுசுறுப்பான முடுக்கத்தையும் வழங்கும்.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350: இதில் பெரிய அளவிலான 349.34சிசி ஏர்-ஆயில்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது குறைந்த ஆர்.பி.எம்-களிலேயே வலுவான டார்க்கைத் தருவதால், அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய அவசியமின்றி மிகவும் நிதானமான மற்றும் சௌகரியமான பயணத்தை அளிக்கிறது.
35
மைலேஜ் விவரங்கள்
யமஹா XSR 155: மைலேஜ் விஷயத்தில் இதன் சிறிய இன்ஜின் மற்றும் இலகுவான எடை காரணமாக முந்திக்கொள்கிறது. இது தோராயமாக லிட்டருக்கு 45 முதல் 51 கி.மீ வரை மைலேஜ் வழங்குகிறது. மேலும் இதன் எரிபொருள் தொட்டி கொள்ளளவு 10 லிட்டராகும்.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350: இதன் 349சிசி இன்ஜின் காரணமாக தோராயமாக 30 முதல் 40 கி.மீ வரை மைலேஜ் தரும். இருப்பினும், இதன் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய எரிபொருள் தொட்டியானது நீண்ட தூரப் பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தொழில்நுட்ப வசதிகளில் யமஹா XSR 155 மாடல் முன்னணியில் நிற்கிறது. இதில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு, டிராக்ஷன் கண்ட்ரோல் (Traction Control) மற்றும் அசிஸ்ட் அண்ட் ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற பல நவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹண்டர் 350 மாடலும் எல்இடி ஹெட்லேம்ப், ட்ரிப்பர் நேவிகேஷன் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் போன்ற வசதிகளைக் கொண்டிருந்தாலும், தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை யமஹாவே அதிக நவீனத்துவத்தைக் கொண்டுள்ளது.
55
விலை & இறுதி முடிவு
யமஹா XSR 155 - இதன் தொடக்க விலை தோராயமாக ரூ.1.50 லட்சமாக உள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 - இதன் விலை தோராயமாக ரூ.1.38 லட்சம் முதல் ரூ.1.71 லட்சம் வரை வேரியண்ட்களுக்கு ஏற்ப மாற்றமடைகிறது.
உங்களுக்கு இலகுவான கையாளுமை, அசத்தலான மைலேஜ், நவீன தொழில்நுட்பம் மற்றும் ஸ்போர்ட்டி ரைடிங் அனுபவம் வேண்டும் என்றால் யமஹா XSR 155 சிறந்த தேர்வாக இருக்கும்.