
இந்தியாவில் கார் விற்பனைச் சந்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. குறிப்பாகப் பண்டிகைக் காலத்தில் வழக்கம்போல் கார் விற்பனை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு முதல் 5 இடங்களைப் பிடித்த கார்களின் மொத்த விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான முதல் 5 கார் மாடல்களின் முழுமையான விவரங்களை பற்றி பார்போம்.
இந்தியக் குடும்பங்களின் விருப்பமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி வேகன்ஆர், கடந்த அக்டோபர் மாதத்தில் 23,747 யூனிட்டுகள் விற்பனையாகி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 18,970 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது 25.18% விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
என்ஜின் & கியர்பாக்ஸ் - இதில் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் உள்ளன. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் என்ஜினில் சிஎன்ஜி (CNG) எரிபொருள் தேர்வும் கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள் & விலை - 6 ஏர்பேக்குகள், டச் ஸ்கிரீன், ஸ்டீயரிங் கட்டுப்பாடுகள் மற்றும் விசாலமான கேபின் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.99 லட்சம் முதல் தொடங்குகிறது.
கடந்த அக்டோபரில் மாருதி பிரெஸ்ஸா கார் 22,436 யூனிட்டுகள் விற்பனையாகி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 12,072 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது 85.85% வளர்ச்சி கண்டுள்ளது. முதல் 5 கார்களில் ஆண்டுக்கு ஆண்டு அதிக வளர்ச்சியைப் பதிவு செய்த மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ஜின் & கியர்பாக்ஸ் - பிரெஸ்ஸாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. சிஎன்ஜி மாடலும் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்கள் & விலை - எலக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், பின்புற ஏசி வென்ட்டுகள் உள்ளிட்ட வசதிகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.49 லட்சமாக உள்ளது.
கடந்த மாதம் டாடா நெக்ஸான் மற்றும் அதன் எலக்ட்ரிக் வெர்ஷன் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விற்பனை 21,966 யூனிட்டுகளாகப் பதிவாகி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனையான 22,083 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது இது 0.53% சரிவாகும். இருப்பினும், செப்டம்பர் மாதத்தைவிட அக்டோபரில் 7.38% அதிக விற்பனை பதிவாகியுள்ளது.
என்ஜின் & கியர்பாக்ஸ் - நெக்ஸானின் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டர்போ என்ஜினும், டீசல் மாடலில் 1.5 லிட்டர் என்ஜினும் வழங்கப்படுகின்றன. இதுதவிர சிஎன்ஜி தேர்வும் உள்ளது. மேனுவல், ஏஎம்டி மற்றும் டிசிடி (DCT) கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கின்றன.
சிறப்பம்சங்கள் & விலை - 6 ஏர்பேக்குகள், பெரிய டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா, சன்ரூஃப் உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்களாகும். இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.39 லட்சம் முதல் தொடங்குகிறது.
பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பிரபலமாக இருக்கும் மாருதி பலேனோ, கடந்த அக்டோபர் மாதத்தில் 20,919 யூனிட்டுகள் விற்பனையாகி 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 16,873 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இதன் மூலம் 23.98% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எனினும், செப்டம்பர் மாதத்தைவிட விற்பனை சற்று குறைந்துள்ளது.
என்ஜின் & கியர்பாக்ஸ் - பலேனோவில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. சிஎன்ஜி தேர்வும் உள்ளது.
சிறப்பம்சங்கள் & விலை - 9-இன்ச் டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே (HUD), வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் செடான் கார்களில் ஒன்றான மாருதி டிசையர், அக்டோபரில் 20,649 யூனிட்டுகள் விற்பனையுடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 20,791 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது 0.68% சரிவைச் சந்தித்துள்ளது.
என்ஜின் & கியர்பாக்ஸ் - டிசையரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. சிஎன்ஜி தேர்வும் வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் & விலை - 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பின்புற ஏசி வென்ட்டுகள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக உள்ளன. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.31 லட்சம் முதல் தொடங்குகிறது.