
தினசரி அலுவலகம், கல்லூரி சென்று வர ஒரு நல்ல பைக் வாங்க வேண்டும், ஆனால் பட்ஜெட் 80,000 ரூபாய்க்கு மேல் போகக் கூடாது. கூடவே மைலேஜும் நன்றாக இருக்க வேண்டும், பராமரிப்புச் செலவும் குறைவாக இருக்க வேண்டும். இப்படி நினைப்பவர்களுக்குச் சந்தையில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
குறைவான விலை, சிறந்த மைலேஜ், நல்ல மறுவிற்பனை மதிப்பு - இதுதான் இந்த பைக்குகளின் பெரிய சாதகமான அம்சங்கள். இப்போதைக்கு TVS ரேடியான், TVS ஸ்போர்ட், ஹீரோ HF டீலக்ஸ் இந்த பட்ஜெட்டில் சிறந்த தேர்வாக இருக்கின்றன. இந்த பைக்குகளின் விலை, எஞ்சின், வசதிகள், மைலேஜ் எப்படி இருக்கின்றன என்று விரிவாகப் பார்க்கலாம்.
குறைந்த விலையில் ஸ்டைலான வடிவமைப்பு கொண்ட ஒரு பிரபலமான கம்யூட்டர் பைக் இது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.58,450-லிருந்து தொடங்குகிறது. குரோம் ஃபினிஷிங், உறுதியான கட்டமைப்பு, நீளமான சீட் இதன் முக்கிய ஈர்ப்புகள். இந்த நீளமான சீட் மூலம் தொலைதூரப் பயணங்களில் கூட வசதியாக அமர்ந்து செல்லலாம். இதன் உயர் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கூடக் கிடைக்கிறது.
USB சார்ஜிங் போர்ட், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், சிங்க்ரனைஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் நிறுவனம் கொடுத்துள்ளார்கள். TVS ரேடியான் பைக்கில் 109.7 சிசி, ஏர்-கூல்டு எஞ்சின் இருக்கிறது. இது 8.08 bhp பவரையும், 8.7 Nm டார்க்கையும் கொடுக்கிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஞ்சின், நகரப் போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த பைக் ஒரு லிட்டருக்குச் சுமார் 65 முதல் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை மற்றும் நம்பகத்தன்மை காரணமாக, இந்தியச் சந்தையில் பல வருடங்களாகப் பிரபலமாக இருக்கும் கம்யூட்டர் பைக் ஹீரோ HF டீலக்ஸ். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59,477-லிருந்து தொடங்குகிறது. எளிமையான வடிவமைப்புடன் சிறந்த கிராஃபிக்ஸ் கொடுத்துள்ளார்கள். அலாய் வீல்கள், எலக்ட்ரிக் ஸ்டார்ட், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இதன் முக்கிய அம்சங்கள்.
ஹீரோ நிறுவனத்தின் i3S தொழில்நுட்பமும் இந்த பைக்கில் இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் மூலமாக, பைக் சும்மா நிற்கும்போது எஞ்சின் தானாகவே நின்று, எரிபொருள் சேமிக்கப்படும். HF டீலக்ஸ் பைக்கில் 97.2 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் இருக்கிறது. இது 8.02 PS பவரையும், 8.05 Nm டார்க்கையும் கொடுக்கிறது.
4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக், எடை குறைவாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், குறுகிய சந்துகளிலும் எளிதாக ஓட்டலாம். மைலேஜ் விஷயத்திலும் HF டீலக்ஸ் அசத்துகிறது. இது ஒரு லிட்டருக்குச் சுமார் 65 முதல் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
குறைந்த பட்ஜெட்டில் சற்று ஸ்போர்ட்டியான தோற்றத்தில் பைக் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு TVS ஸ்போர்ட் ஒரு நல்ல தேர்வு. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.58,750. சிறந்த பாடி கிராஃபிக்ஸ், மெலிதான ஹெட்லேம்ப், LED DRL-கள் இந்த பைக்கின் தோற்றத்தை இன்னும் மெருகேற்றுகின்றன. இதில் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலக்ட்ரிக் ஸ்டார்ட், 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூயல் டேங்க் இருக்கிறது.
இந்த பைக்கில் 109.7 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 8.08 bhp பவரையும், 8.7 Nm டார்க்கையும் கொடுக்கிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வரும் இந்த பைக், நகரத்தின் தினசரி பயன்பாட்டிற்குப் பொருத்தமாக இருக்கும். இது ஒரு லிட்டருக்கு 70 முதல் 75 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது?
குறைந்த விலை, நல்ல மைலேஜ், குறைவான பராமரிப்புச் செலவு வேண்டும் என்றால் இந்த மூன்று பைக்குகளுமே நல்ல வாய்ப்புகள்தான். அதிக வசதிகள் மற்றும் சொகுசான பயணம் முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு ரேடியான் சரியாக இருக்கும். ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் நல்ல மைலேஜ் வேண்டும் என்றால் TVS ஸ்போர்ட் பார்க்கலாம். அதேபோல, எளிமையான வடிவமைப்பு, நம்பகத்தன்மை, சிறந்த மைலேஜிற்கு முதல் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கு ஹீரோ HF டீலக்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.