அனைத்து வாகன பிரிவுகளிலும் வளர்ச்சி காணப்பட்டதாக FADA தலைவர் சி.எஸ். விக்னேஷ்வர் தெரிவித்துள்ளார். 2025-ல் மொத்த ஆட்டோ சில்லறை விற்பனை 2,81,61,228 யூனிட்களாக இருந்தது, இது கடந்த ஆண்டை விட 7.71% அதிகம். முதல் பாதியில் விற்பனை மந்தமாக இருந்தாலும், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஜிஎஸ்டி 2.0 காரணமாக வாகன விலை குறைந்தது, நுகர்வோர் நம்பிக்கை உயர்ந்ததும் விற்பனைக்கு ஊக்கம் அளித்தது. டிசம்பரில் மட்டும் மொத்த ஆட்டோ விற்பனை 14.63% உயர்ந்து 20,28,821 யூனிட்களை எட்டியது. இந்த மாதத்தில் வர்த்தக வாகனங்கள் 24.60%, மூன்று சக்கர வாகனங்கள் 36.10%, இரு சக்கர வாகனங்கள் 9.50% மற்றும் டிராக்டர்கள் 15.80% வளர்ச்சியைப் பதிவு செய்தன.
மேலும், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2025-ல் பயணிகள் வாகனங்களில் 21.30% சிஎன்ஜி வாகனங்களாகவும், 3.95% மின்சார வாகனங்களாகவும் இருந்தன. டிசம்பர் மாதத்திலும் இதே போக்கு தொடர்ந்தது. இரு சக்கர, பயணிகள் மற்றும் வர்த்தக வாகன பிரிவுகளில் மின்சார வாகனங்களின் பங்கு அதிகரித்துள்ளது, சிஎன்ஜி வாகனங்களும் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2025 ஆண்டு வலுவான தேவை மற்றும் உயர்ந்த நம்பிக்கையுடன் முடிவடைந்துள்ளது. இது 2026-க்கும் நல்ல தொடக்க அறிகுறியாக பார்க்கப்படுகிறது.