இன்றைய காலகட்டத்தில் கார் என்பது பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. நம் நாட்டில் கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால்தான், பல்வேறு வெளிநாட்டுக் கம்பெனிகள் தங்கள் கார்களை இங்கு அறிமுகப்படுத்தி நல்ல சந்தையைப் பெற்று வருகின்றன. பெட்ரோல், டீசல் கார்கள் மட்டுமல்லாமல், மின்சார கார்களும் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகின்றன. அவற்றின் விலைகளும் போட்டித்தன்மையுடன் குறைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில், பலருக்கும் எந்த வகையான காரை வாங்குவது என்பதில் குழப்பம் இருக்கும். பெட்ரோல், டீசல், மின்சார கார்களில் எது உங்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கார் வாங்க வேண்டுமென்றால், அதன் விலையைத்தான் அனைவரும் அதிகம் கவனிப்பார்கள். ஆனால் விலை மட்டுமல்ல.. பராமரிப்புச் செலவுகள், எரிபொருள் விலை, பழுதுநீக்குதல் போன்ற பல விஷயங்கள் கார் வாங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும். கார்களின் விலையைப் பொறுத்தவரை, பொதுவாக பெட்ரோல் கார்கள் குறைந்த விலையில் கிடைக்கும். டீசல் கார்கள் சற்று அதிக விலையில் கிடைக்கும்.
மின்சார கார்கள் இரண்டையும் விட அதிக விலை கொண்டவை. ஆனால் மின்சார வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவு குறைவாக இருக்கும். பெட்ரோல், டீசல் கார்களுக்கு பராமரிப்புச் செலவு அதிகமாக இருக்கும்.