
விமானப் போக்குவரத்துத் துறையில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பசுமை விமானப் போக்குவரத்தை' (Green Aviation) நோக்கிய பயணத்தில் சீனா ஒரு மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. சீன அரசின் 'கமர்ஷியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா' (COMAC) நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கிய CE-25A என்ற மின்சாரப் பயணிகள் விமானம், முதல் முறையாக மனிதர்கள் இயக்க வானில் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்துள்ளது.
கிழக்கு ஷான்டாங் (Shandong) மாகாணத்தில் உள்ள பின்சோவ் (Binzhou) நகரில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 14) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் 2 விமானிகள் மற்றும் ஒரு விமான சோதனைப் பொறியாளர் என மூவர் பயணித்ததாகச் சீன அரசுத் தொலைக்காட்சியான சிசிடிவி (CCTV) செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 22,000 பவுண்டுகள் (10 டன்) எடை கொண்ட இந்த பிரம்மாண்ட மின்சார விமானத்தின் சோதனை அமர்வு மொத்தம் 57 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகள் நீடித்தது. இதில், விமானம் 16 நிமிடங்கள் மற்றும் 38 வினாடிகள் வானில் வெற்றிகரமாகப் பறந்து 60.4 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது. சோதனையின்போது விமானத்தின் அனைத்து அமைப்புகளும் எந்தத் தடையுமின்றி இயல்பாகச் செயல்பட்டன; நாங்கள் எதிர்பார்த்தபடியே விமானத்தின் செயல்பாடு துல்லியமாக இருந்தது எனப் பொறியாளர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களை ஏற்றிக்கொண்டு பறப்பதற்கு முன்பாக, இந்த விமானம் பல கடுமையான சோதனைகளைக் கடந்து வந்துள்ளது. கடந்த பிப்.2, அன்று, இந்த விமானம் யாரும் இன்றித் தானியங்கி முறையில் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. தொடர்ந்து 19 ஆளில்லா உறுதிப்படுத்தல் சோதனைப் பயணங்களை (Autonomous validation flights) வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகே, மனிதர்கள் பயணிக்கும் சோதனைக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டது.
வழக்கமான பயணிகள் விமானங்களைப் போல இதில் எரிபொருளால் இயங்கும் ஜெட் என்ஜின்களோ அல்லது டர்போபிராப் (Turboprop) என்ஜின்களோ கிடையாது. அதற்குப் பதிலாக, 'பரவலாக்கப்பட்ட மின்சார டக்டட்-ஃபேன் உந்துவிசை அமைப்பு' (Distributed electric ducted-fan propulsion system) என்ற நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பெரிய என்ஜினைப் பொருத்துவதற்குப் பதிலாக, விமானத்தின் இறக்கைகள் முழுவதிலும் பல மின்சார விசிறிகள் (Electric fans) வரிசையாகப் பொருத்தப்பட்டுள்ளன.
விமானத்தில் உள்ள சக்திவாய்ந்த பேட்டரி அமைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெறும் மோட்டார்கள், இந்த விசிறிகளைச் சுழல வைத்து விமானத்தை முன்னோக்கி உந்தித் தள்ளுகின்றன. இறக்கைகள் முழுவதும் உந்துவிசையைப் பரவலாக்குவதன் மூலம், மின்சார விமானங்களுக்கான புதிய காற்றியக்கவியல் (Aerodynamic) மற்றும் உந்துவிசை வடிவமைப்புகளைப் பொறியாளர்களால் ஆராய முடிகிறது. இருப்பினும், இதன் முழுமையான செயல்திறன் மற்றும் நன்மைகள் அடுத்தகட்ட சோதனைகளின் மூலமே முழுமையாக உறுதி செய்யப்படும்.
சீனாவின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனமான சிஏடிஎல் (CATL), ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் மற்றும் பல கூட்டாளர்களுடன் கைகோர்த்து கோமாக் (COMAC) நிறுவனம் இந்தத் திட்டத்தைச் சாத்தியமாக்கியுள்ளது. நகரங்களுக்கு இடையிலான (Intercity) வணிகப் போக்குவரத்துக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் சிறப்பம்சங்கள்;
பயணிகள் இருக்கைகள் 19 இருக்கைகள்
அதிகபட்ச புறப்படும் எடை 10 டன் (22,000 பவுண்டுகள்)
பயண வேகம் (Cruising Speed) மணிக்கு 300 கிலோமீட்டர்
பயண உயரம் (Cruising Altitude) 2,400 மீட்டர்
பயணத் தூர வரம்பு (Range) 400 கிலோமீட்டர்
இந்த விமானத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வணிக ரீதியான பயணிகள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன்பான கட்டாய ஒழுங்குமுறை நடவடிக்கையான 'வகைச் சான்றிதழ்' (Type Certificate) கோரும் விண்ணப்பத்தை, சீன சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (CAAC) முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம், பேட்டரியில் இயங்கும் பயணிகள் விமானங்கள் வணிக ரீதியாக வானில் பறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.