இந்திய மின்சார வாகனச் சந்தையில் மஹிந்திரா நிறுவனம் முக்கியமான விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. அந்நிறுவனத்தின் மின்சார எஸ்யூவிகளின் ஒட்டுமொத்த விற்பனை 1 லட்சம் யூனிட்களைக் கடந்துள்ளது. இதில் Born Electric வரிசை வாகனங்கள் மட்டுமின்றி XUV400 EV, XUV 3XO EV ஆகிய மாடல்களின் விற்பனையும் சேர்க்கப்பட்டுள்ளது. மஹிந்திராவின் 2026-27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு அறிக்கையின்படி, இந்தக் காலகட்டத்தில் நிறுவனத்தின் மின்சார எஸ்யூவி விற்பனை 23,345 யூனிட்களாக இருந்தது. இது இந்திய மின்சார வாகனச் சந்தையில் நிறுவனத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது.
XEV 9S படைத்த விற்பனை சாதனை
மஹிந்திராவின் XEV 9S மின்சார எஸ்யூவி இந்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 2026-27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 13,275 யூனிட்கள் விற்பனையாகி, இந்தியாவின் அதிகம் விற்பனையான மின்சார எஸ்யூவியாகத் திகழ்ந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏழு பேர் அமரக்கூடிய வசதி, விசாலமான உட்புற அமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை இந்தக் காரின் முக்கிய அம்சங்களாக உள்ளன. 59 kWh, 70 kWh, 79 kWh என வெவ்வேறு பேட்டரி தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.