எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு பகுதியாகும். ஒவ்வொருவரின் பிறப்பும், வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வும் விதியின் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் ஜாதகம் பெற்றோர்களுக்கு நற்பலன்களை தரும் என்ற எதிர்பார்ப்பு நம் மரபில் உள்ளது. அதேபோல் குறிப்பிட்ட சில தினங்களில் பிறக்கும் ஆண் குழந்தைகள் தங்கள் தந்தையின் வாழ்க்கையில் ராஜயோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கையும் உண்டு.
ஜோதிட அடிப்படையில் குழந்தை பாக்கியம்
ஜோதிட அடிப்படையில் ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் புத்திர பாக்கியத்தை குறிக்கும் இடமாகும். 5ஆம் இடத்தின் அதிபதி வலுப்பெற்று சுப கிரகங்களின் பார்வை அந்த வீட்டில் விழுமேயானால் அந்த ஜாதகருக்கு யோகமான குழந்தைகள் பிறக்கும் என்று நம்பப்படுகிறது. குழந்தை பிறந்த உடனேயே தந்தையின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம், பதவி உயர்வு, பொருளாதார வளர்ச்சி, தொழிலில் வெற்றி ஆகிய நிகழ்வுகள் அந்த குழந்தை ராஜயோகத்துடன் பிறந்துள்ளது என்பதன் அறிகுறியாக கருதப்படுகிறது.
எண் கணிதத்தின் அடிப்படையில் அதிர்ஷ்ட தேதிகள்
எண் கணிதத்தின் அடிப்படையில் ஒரு குழந்தையின் பிறந்த தேதி என்பது குழந்தையின் ஆளுமைத் திறன் மற்றும் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கிறது. குறிப்பிட்ட எண்களின் கீழ் பிறக்கும் குழந்தைகள் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கு குறிப்பாக தங்கள் தந்தைக்கு அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவார்கள் என்று நம்பப்படுகிறது. அந்த எண்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
எண் 3-ன் ஆதிக்கம்
ஒவ்வொரு மாதத்திலும் 3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் மூன்றாகும். இவர்கள் குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள். குரு பகவான் ஞானம், செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராவார். இந்த தேதிகளில் குழந்தைகள் பிறந்தால் தந்தையின் தொழில், பதவி மற்றும் நிதி நிலையில் ஏற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது. தந்தை எடுக்கக்கூடிய முடிவுகளில் இவர்கள் நேர்மறை ஆற்றலை செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். குறிப்பாக 12ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு சூரியன் மற்றும் குருவின் சக்தி இருப்பதால் அவர்கள் தங்கள் தந்தையின் தொழிலை முன்னெடுத்துச் சென்று பெரிய சாதனைகள் படைக்கக்கூடிய யோகத்தையும் அளிப்பார்கள்.
எண் 1-ன் ஆதிக்கம்
ஒவ்வொரு மாதத்திலும் 1,10,19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள். சூரிய பகவான் அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ் மற்றும் கௌரவத்தைக் குறிக்கும் கிரகம் ஆவார். இந்த எண்களில் பிறந்த குழந்தைகள் தங்களின் தந்தையின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் தந்தைக்கு பெயர், புகழ், மற்றும் கௌரவத்தை ஏற்றித் தருவார்கள். இவர்கள் பிறந்த பிறகு தந்தையின் பணியிடத்தில் அவர்களுக்கு அசுர வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பிறப்பும், யோகமும்
ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் ஜாதகத்தில் அமையும் சுப யோகங்கள் தந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக லக்னாதிபதி வலுப்பெற்று ஒன்பதாவது இடமான தந்தை ஸ்தானத்தை பார்த்தால் அது தந்தைக்கு ராஜயோகத்தை கொடுக்கும். ஜோதிடம் மற்றும் எண் கணிதங்கள் நம்பிக்கை சார்ந்தவை மட்டுமே. இதில் கூறப்படும் பலன்கள் ஒருவரின் கர்ம வினைகளையும், பொதுவான கிரக நிலைகளையும் பொருத்து மாறுபடும். முழுமையான நம்பிக்கையுடன் கடினமாக உழைப்பதே உண்மையான ராஜயோகத்தை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)