புத ஆதித்ய யோகம்: ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ராஜயோகங்களில் ஒன்றாகக் கருதப்படுவது புத ஆதித்ய யோகம். சூரியனும் புதனும் ஒரே ராசி அல்லது ஒரே வீட்டில் இணையும் போது இந்த யோகம் உருவாகிறது. சூரியன் அதிகாரம், தலைமைத்துவம், புகழ் ஆகியவற்றைக் குறிக்கிறார். புதன் அறிவு, பேச்சுத் திறன், வணிகம், கணக்குப் புத்தி மற்றும் தகவல் பரிமாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்த இரு கிரகங்களின் சேர்க்கை ஒருவரின் புத்திக்கூர்மை, முடிவெடுக்கும் திறன் மற்றும் தொழில் வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
இந்த யோகம் உள்ளவர்களுக்கு கல்வி, வியாபாரம், நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், வங்கி, ஊடகம், சட்டம் போன்ற துறைகளில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதேபோல், பணவரவு அதிகரித்து, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் என்று நம்பப்படுகிறது.