ஜிவ்வுன்னு எகிறும் ரேட்...எலெக்‌ஷன் முடியிறவரைக்கும் காசு குடுத்து மட்டன் சாப்பிடுறதை மறந்துடுங்க...

By Muthurama LingamFirst Published Mar 22, 2019, 3:36 PM IST
Highlights


இப்படி டிமாண்ட் அதிகமாகி இருப்பதால் இன்னும் சில தினங்களில் தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ரூ 520க்கு விற்கும் மட்டன் ரூ.700 வரையும், சிறு நகரங்களில் 400 ரூபாய்க்கு விற்று வந்த மட்டன் விலை ரூ.600 வரையும் உயர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.


பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர்களின் மெனுவில் மட்டன் பிரியாணி பிரதான இடம் பிடித்துள்ளதால் இன்னும் ஒரு சில தினங்களில் ஆட்டுக் கறியின் விலை சுமார் 25% அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக இறைச்சிக் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஆக ஏப்ரல் 18 வரை வீட்டுக்கு மட்டன் வாங்குவதை ஒத்திவைத்துவிட்டு, ஏதாவது ஒரு வேட்பாளரின் தயவில் மட்டன் பிரியாணி சாப்பிட்டு திருப்தி அடைவது நல்லது.

வரும் ஏப்ரல் 18ம் தேதி 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ள நிலையில் வேட்பாளர்களின் களப் பணியாளர்கள் தமிழகம் முழுக்க ஆடுகளை வலைவீசி விலைபேசி வருவதாகத் தெரிகிறது. கோடைக்காலம் ஆதலால் வாக்காளப் பெருமக்களின் விருப்பம் சிக்கன் பிரியாணியை விட மட்டன் பிரியாணியின் மேல் அதிகம் உள்ளதால் இந்த நிலை.

குறிப்பாக தென் மாவட்டங்களில் எந்த விசேஷமாக இருந்தாலும் கறி விருந்தின்றி நடக்காது. தேர்தலும் ஒரு திருவிழாதானே என்ற எண்ணத்தில் தற்போது பல கட்சிகள் தங்களின்கூட்டங்களில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு கறி விருந்தும், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு மட்டன் பிரியாணியும் கூடவே தாக சாந்திக்கு உற்சாக பானமும் வழங்குவது ஜகஜமாகிவிட்டது.

இப்படி டிமாண்ட் அதிகமாகி இருப்பதால் இன்னும் சில தினங்களில் தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ரூ 520க்கு விற்கும் மட்டன் ரூ.700 வரையும், சிறு நகரங்களில் 400 ரூபாய்க்கு விற்று வந்த மட்டன் விலை ரூ.600 வரையும் உயர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஸோ... அடுத்த ஒரு மாத காலத்திற்கு மட்டன் பிரியாணி சாப்பிட ஆசை வந்தால், ‘அண்ணனுக்கு ஜே’ சொல்லிவிட்டு ஏதாவது ஒரு வேட்பாளரின் தயவில் ஓ.சி.பிரியாணி சாப்பிடுவதே சாலச் சிறந்தது.

click me!