
அண்ணியை கேலி செய்தவர்களை கண்டித்த கொழுந்தனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பிரியா (24). நேற்று முன்தினம் இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் நின்று கொண்டிருந்த 6 பேர் பிரியாவை ஆபாச வார்த்தையால் கிண்டல் செய்துள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு வந்த பிரியா இதுதொடர்பாக கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தகாத வார்த்தைகளை பேசிய அந்த நபர்களை ரவி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ரவியை தாக்கியுள்ளனர். இதுபற்றி அறிந்ததும் ரவிச்சந்திரனின் தம்பி வையாபுரியும் (36) அங்கு சென்று, அவர்களை கண்டித்தார். அப்போது, அந்த கும்பல் வையாபுரியை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வையாபுரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.