'வெளிநாட்டில் வேலை' என கோடிக்கணக்கில் மோசடி..! பணத்தை சுருட்டிய வாலிபரின் பகீர் தகவல்..!

By Manikandan S R SFirst Published Dec 20, 2019, 3:25 PM IST
Highlights

வெளிநாட்டில் வேலைக்கு சேர்ப்பதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த கோவை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்தவர் சையது அசாருதீன். வெளிநாடு செல்ல வேண்டும் என கூறி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை அணுகியுள்ளார். இவர் கன்சல்டன்சி நடத்தி வெளிநாடுகளுக்கு இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் பணியை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அசாருதீனையும் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி எடுத்திருக்கிறார். இந்த நிலையில் திடீரென ஒருநாள் சிவகுமாரை தொடர்பு கொண்டு பேசிய அசாருதீன், தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் கனடா நாட்டிற்கு வந்து விட்டதாகவும் மிக பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பின் அவ்வப்போது சிவகுமாரை தொடர்பு கொண்டு பேசிய அசாருதீன், கனடாவில் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஆட்களுக்கு தேவைப்படுவதாக கூறியிருக்கிறார். அதற்கு உதவி செய்தால் கமிஷனாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். முன்பணமாக 30 லட்சம் தருமாறும் கேட்டுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட சிவகுமார், பல இளைஞரிடம் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி பணம் பெற்று அசாருதீனிடமும் அவரது சகோதரியிடமும் 2 கோடி வரை கொடுத்திருக்கிறார்.

ஆனால் ஒருவரை கூட வெளிநாட்டிற்கு வேலைக்கு அசாருதீன் அழைக்காமல் இருந்துள்ளார். பணம் கொடுத்தவர்கள் சிவகுமாரிடம் தொடர்ச்சியாக வேலை சம்பந்தமாக கேட்டுள்ளனர். அசாருதீன் காலம் தாழ்த்தி வந்த நிலையில் அவர் மீது சந்தேகமடைந்த சிவகுமார் அவரிடம் கேட்டபோது பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக அசாருதீன் மிரட்டி இருக்கிறார். அப்போது தான் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கோவையில் இருந்தே அசாருதீன் பணம் பறித்த விஷயம் சிவகுமாருக்கு தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்தார் சிவகுமார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அசாருதீனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பல மோசடிகளில் அசாருதீன் ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதால் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

click me!