நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த பெண் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த காக்கா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபி, குணவதி தம்பதி. இவர்களுக்கு 5, 3 வயதில் இரு மகன்கள் இருந்தனர். கோபி டீ கடை வைத்துள்ள நிலையில், நேற்று இரவு பணிக்கு சென்று விட்டார். கோபி இல்லாத நேரத்தில் குணவதிக்கும், அவரது தந்தையான கேசவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையேயான வாய் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குணவதி தனது இரு மகன்களையும் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆத்திரத்தில் வீட்டிற்கு அருகில் இருந்த விவசாய கிணற்றில் தனது இரு மகன்களையும் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். மேலும் கிணற்றின் அருகில் இருந்த மோட்டார் அறையில் குணவதி தற்கொலை செய்து கொண்டார்.
மகள் மற்றும் பேரன்களின் மரணத்திற்கு தாம் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் கேசவன் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை உட்கொண்டு அவரும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பணி முடிந்து வீட்டிக்கு வந்து பார்த்த கோபி, வாயில் நுரைத் தள்ளிய நிலையில் சுயநினைவின்றி இருந்த கேசவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ராணிபேட்டையில் பயங்கரம்: குடும்ப தகராறில் மனைவி கொடூர கொலை; நாடகமாடிய கணவன் கைது
அதன் பின்னர் வீட்டில் இருந்த தனது மனைவி மற்றும் மகன்கள் மாயமானது குறித்து தேடத் தொடங்கினார். அப்போது வீட்டின் அருகில் இருந்த விவசாய கிணற்றில் இரு குழந்தைகளும், மோட்டார் அறையில் தனது மனைவியும் இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து மோகனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரசு பள்ளியில் அதிரடி காட்டிய அமைச்சர் தங்கராஜ்; விழி பிதுங்கி நின்ற ஆசிரியர்கள், அதிகாரிகள்
விரைந்து வந்த காவல் துறையினர் மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், குடும்ப பிரச்சினை காரணமாக இந்த தற்கொலை நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சிகிச்சையில் உள்ள கேசவன் கூறும் தகவல்களின் அடிப்படையிலேயே உண்மை நிலவரம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.