நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வேலைக்காரப் பெண் மாரி ஆகிய மூவரையும் மர்மக் கும்பல் கொலை செய்த சம்பவம், அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு அறையாக தேடிக் சென்று அந்தக் கும்பல் வெறித்தனமாக வெட்டியுள்ளதால் அதன் பின்னணி என்னவாக இருக்கும் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி முதன்முதலாக மாநகராட்சியாக தரம் உயர்த்தபட்ட பிறகு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று, முதல் மேயராகப் பொறுப்பேற்றவர், உமா மகேஸ்வரி. தொடர்ந்து தி.மு.க-வில் தீவிரமாகப் பணியாற்றிவந்தார். உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன். நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
உமா மகேஸ்வரியின் மகன் சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார். மகள் கார்த்திகா, நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றிவந்தார். அவரது வீட்டின் அருகில் உமா மகேஸ்வரி தனது கணவருடன் வசித்துவந்தார்.
இன்று மாலை வழக்கம்போல உமா மகேஸ்வரி மற்றும் கணவர் ஆகியோருடன் அந்த வீட்டில் பணி புரியும் வேலைக்கார பெண் மாரி என்பவரும் இருந்துள்ளார். அப்போது அரிவாள், உருட்டுக் கட்டை, இரும்பிக் கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு நுழைந்த கும்பல் ஒன்று உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
வீட்டில் மூவரும் தனித்தனி அறையில் இருந்தபோது அந்த கும்பல் தேடி தேடிச் சென்று கொடூரமாக வெட்டிக் கொன்றிருப்பது போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஒரு வெறித்தனமான உள்நோக்கத்துடன் இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொடூர கொலைச் சம்பவத்துக்குக் காரணம் யார்? என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலுத் முன்விரோதம் அல்லது சொத்துத் தகராறக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.
தற்போது கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்டைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். உமா மகேஸ்வரியின் கொலை நெல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.