ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா குடும்பத்தினருடன் கைது ! இன்று தேனியில் விசாரணை !!

By Selvanayagam PFirst Published Sep 26, 2019, 8:01 AM IST
Highlights

நீட்  நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த விவகாரத்தில், குடும்பத்துடன் தலைமறைவான, மாணவர் உதித் சூர்யாவை, தனிப்படை போலீசார், திருப்பதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர், டாக்டர் வெங்கடேசன்; ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, கயல்விழி. இவர்களது மகன், உதித் சூர்யா, .

இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிளஸ் 2 முடித்த, உதித் சூர்யாவை, டாக்டராக்க வேண்டும் என, வெங்கடேசன் விரும்பினார். ஆனால், இரண்டு முறை, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதியும், உதித் சூர்யா தேர்ச்சி பெறவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த, வெங்கடேன், மூன்றாவது முயற்சியாக, மே, 5ம் தேதி நடந்த, நீட் தேர்வில், உதித் சூர்யாவை பங்கேற்க வைத்துள்ளார்.

இந்த தேர்வில், உதித் சூர்யா, 385 மதிப்பெண்கள் பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ்கள் சமர்ப்பித்து, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்துள்ளார். இவர், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற்றதும், ஆள்மாறாட்டம் செய்து, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக, தேனி மருத்துவ கல்லுாரி, 'டீன்' ராஜேந்திரனுக்கு, 'இ - மெயிலில்' புகார் வந்தது.

இதையடுத்து, தேனி மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள், உதித் சூர்யாவின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். அப்போது, உதித் சூர்யாவின், 'நீட்' தேர்வு ஹால்டிக்கெட்டில், வேறு ஒருவரின் புகைப்படம் இருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையில், 'மன அழுத்தம் காரணமாக, எனக்கு படிக்க பிடிக்கவில்லை' என, உதித் சூர்யா, கல்லுாரி நிர்வாகத்திடம் கடிதம் எழுதி கொடுத்துள்ளதும், சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, ராஜேந்திரன், தேனி மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்தார்.அம்மாவட்டத்தை சேர்ந்த, க.விலக்கு போலீசார், உதித் சூர்யா மீது வழக்குப் பதிந்து, தீவிரமாக தேடி வந்தனர். சென்னை, தேனாம்பேட்டையில் வசித்து வந்த உதித் சூர்யா, பெற்றோருடன் தலைமறைவானார். மேலும், உதித் சூர்யாவுக்கு, முன்ஜாமின் பெறும் முயற்சியும் நடந்தது.

இந்நிலையில், , பெற்றோருடன் உதித் சூர்யா, திருப்பதியில் பதுங்கி இருப்பதாக, தேனி மாவட்டம், க.விலக்கு காவல் நிலைய தனிப்படை போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த தனிப்படையினர், ஒரு வீட்டில் பதுங்கி இருந்த, உதித் சூர்யா மற்றும் பெற்றோரை, சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின், உதித் சூர்யாவை கைது செய்து, மூவரையும், சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பல மணி நேர விசாரணைக்கு பின், உதித் சூர்யா, தேனிக்கு அழைத்து செல்லப்பட்டார். இன்று தேனியில் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

click me!