திருவாரூர் அருகே ஜாமீனில் வெளிவந்த ரவுடியை அவரது நண்பர்களே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே ஜாமீனில் வெளிவந்த ரவுடியை அவரது நண்பர்களே வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் பெரிய மில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து என்கிற கராத்தே மாரிமுத்து(35). இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பிரபல ரவுடியான இவர் மீது திருவாரூர் போலீஸ்நிலையத்தில் கொலை மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் ஆயுதங்களுடன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்றதாக திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, தோத்தாமணி, பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறையில் இருந்து மாரிமுத்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரை அழைத்து வருவதற்காக அவருடைய நண்பர்கள் 6 பேர் காரில் நாகை சென்றனர். ஆனால் நள்ளிரவு வெகு நேரம் ஆகியும் மாரிமுத்து வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் மாரிமுத்து கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை திருவாரூர் மில் தெரு அருகில் உள்ள ரயில் நிலையம் அருகே கருப்பு நிற தார்பாய் ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் அந்த தார்ப்பாயை திறந்து பார்த்தனர். அப்போது தார்ப்பாய்க்குள் ரவுடி மாரிமுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கொலை செய்த கொலையாளிகள் யார்? முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் வினோத் மற்றும் அவரது நண்பர்களுடன் அடிக்கடி மாரிமுத்துவிற்கு தகராறு வந்து கொண்டே இருந்ததால் அவரை பழிவாங்கப் ஜாமீனில் வெளியே எடுத்து கொலை செய்துள்ளனர். இதனிடையே, சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மாரிமுத்துவை அழைப்பதற்காக காரில் சென்ற 6 பேரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். முன் விரோதத்தால் நண்பர்களே மாரிமுத்துவை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.