ரெட்ஹில்ஸ் பகுதியில் வாக்கிங் சென்ற அதிமுகமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபனை இரு சக்கரத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக நிர்வாகி- வெட்டி கொலை
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன், இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இன்று காலை 6 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் அருகே நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து மர்ம கும்பல் கொண்டு வந்த அரிவாளால் பார்த்திபனை வெட்ட முயற்ச்சித்தனர். இதனை அறிந்த பார்த்திபன் அங்கிருந்து தப்பி செல்ல தொடங்கினார். இருந்த போதும் மர்ம கும்பல் பார்த்திபனை கீழே தள்ளி சரமாரியாக வெட்டியுள்ளது.
6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
இதனையடுத்து பார்த்திபனின் அலறல் சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள் ஒன்று கூடியதால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனையடுத்து பார்த்திபனை அருகில் உள்ள தனியார் மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பார்த்திபனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார்த்திபன் மீது வழக்குகள்
பார்த்திபன் மீது செம்மர கடத்தல் வழக்கானது உள்ளது. ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். மேலும் பார்த்திபன் மீது கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.