திருத்தணி ஹோட்டலுக்குள் இளைஞர் கொலை !! குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயன்றபோது 4 பேரும் தவறி விழுந்து படுகாயம் !!

By Selvanayagam PFirst Published Aug 19, 2019, 8:13 AM IST
Highlights

திருத்தணி கோர்ட் வளாகத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளைஞர் மகேஸ் கொலை செயய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்ற போது அவர்கள் 4 பேரும் வழக்கம் போல் தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த மகேஸ் கோர்ட்டு அருகில் உள்ள ஓட்டலுக்குள் வைத்தே 4 பேர் கொண்ட கும்பலால் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

ஓட்டலில் உள்ள கேமராவில் மகேஸ் வெட்டப்படும் காட்சியும், பெண்கள் பயந்து ஓட்டம் பிடிக்கும் காட்சியும் வெளியாகி பீதியை ஏற்படுத்தியது.
இக்கொலை தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.. இதில் கொலைக்கான பின்னணி வெளியானது. மகேசின் நண்பர் விக்கி கடந்த மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். இதில் போலீசார் துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்தனர்.

விக்கி கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் தினேசின் சகோதரர் கார்த்திக் சில நாட்களுக்கு முன்பு மிரட்டப்பட்டார். இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் தினேஷ் வெட்டப்பட்டு உயிர் பிழைத்துக் கொண்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நண்பர்களான இவர்களை பார்க்க வந்த போதுதான் மகேஷ் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். விக்கியின் கொலை வழக்கில் மகேஸ் முக்கிய சாட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை வழக்கில்  பெருமாள் பட்டு பகுதியை சேர்ந்த விமல்ராஜ், அஜித்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பெருமாள் பட்டு பகுதியில் பதுங்கி இருந்த இவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவர்கள் திருத்தணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் கை, கால்கள் உடைந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

தனிப்படை போலீசார் பிடிக்கச்சென்ற போது, 4 பேரும் தப்பி ஓடியதாகவும், அப்போது தவறி விழுந்து கை, கால்களை முறித்துக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.மகேஸ் கொலை வழக்கில் பிடிபட்ட 4 பேரும் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட விக்கி கொலை வழக்கிலும் கைதானவர்கள் ஆவர். இந்த வழக்கில் 5-வதாக கார் டிரைவர் சதீசும் கைது செய்யப்பட்டுள்ளார்.

click me!