தமிழ் ஆசிரியை ஒருவர் மாணவிகளின் அங்கங்களை குறிப்பிட்டு ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரை அடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழ் ஆசிரியை ஒருவர் மாணவிகளின் அங்கங்களை குறிப்பிட்டு ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரை அடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது, அந்த ஆசிரியை பணியிடை மாற்றம் செய்யப்படுவார் என மாவட்ட கல்வி அதிகாரி உறுதி அளித்ததால் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது, அதுதொடர்பான ஆதாரங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில் மறுபுறம் மாணவிகளின் மர்ம மரணம் தொடர்கதையாகி வருகிறது. இந்த வரிசையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் ஒருபுறம், மர்ம மரணங்கள் மறுபுறம் என பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியை மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விவரம் பின்வருமாறு:- மணப்பாறை அருகே புத்தாநத்தம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அப்பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளியில் பணி புரியும் மணப்பாறை பகுதியை சேர்ந்த ஆசிரியை மெகபூபா என்பவர் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ் ஆசிரியையாக இருந்து வருகிறார். இந்நிலையில் மாணவிகளின் அங்கங்களை குறிப்பிட்டு ஆபாசமான பேசுவதில் வாடிக்கையாக இருந்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் சிலர் கைகளில் பிளேடால் கிழித்துக் கொண்டுள்ளனர். பின்னர் பெற்றோர்கள் விசாரித்ததில் ஆசிரியையின் நடவடிக்கை குறித்து கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக விசாரித்து வருவதாகவும்,
இப்படி நடந்துகொண்ட ஆசிரியை நிச்சயம் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்றும் உறுதியளித்தார். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர், ஆனாலும் பள்ளியை சுற்றி போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.