களவாணியுடன் கூட்டில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்..! சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் அதிரடி..!

By Manikandan S R SFirst Published Jan 24, 2020, 4:04 PM IST
Highlights

காவல்துறையால் தேடப்பட்டு வந்த திருடனுக்கு கைது செய்ய வரும் தகவல்களை அளித்து தப்ப வைத்த காவல்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதனால் காவல்துறையினர் மகேஷை தீவிரமாக தேடி வந்தனர்.ஆனால் காவல்துறையினரிடம் அவர் சிக்காமல் தொடர்ந்து தப்பி வந்திருக்கிறார். அவரை கைது செய்ய காவலர்கள் நடவடிக்கை எடுக்கும் நேரங்களில் தகவலறிந்து தப்பி இருக்கிறார்.

இதையடுத்து அவரை வலைவீசி தேடிய காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மகேஷின் செல்போனை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் அவருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது. சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. கடந்த 2019ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் பணியாற்றி இருக்கிறார்.

அப்போது குற்றவாளி மகேஷிற்கும் காவல்துறை அதிகாரி குருமூர்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. காவல்துறையினர் அவரை தேடுவதையும் கைது செய்ய வரும் தகவல்களையும் அவ்வப்போது தெரிவித்து இருக்கிறார். அதை அறிந்த மகேசும் காவலர்களிடம் சிக்காமல் தப்பி இருக்கிறார். இந்த சம்பவத்தில் குருமூர்த்தி மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் குற்றவாளிக்கு தகவல் தெரிவித்தது உறுதியானது. இதையடுத்து குருமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: அசுர போதையில் 5 பேருடன் பைக்கில் பறந்த வாலிபர்..! நீதிபதி கொடுத்த விநோத தண்டனை..!

click me!