4 மணி நேரம் தொடர்ச்சியாக ஆன்லைன் கேம் ஆடிய மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

By karthikeyan VFirst Published Feb 2, 2021, 6:34 PM IST
Highlights

புதுச்சேரி அருகே 4 மணி நேரம் தொடர்ச்சியாக, ஹெட்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு ஆன்லைன் கேம் ஆடிய 12ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள வி.மணவெளியை சேர்ந்த பச்சையப்பன் என்ற பால் வியாபாரியின் மகன் தர்ஷன். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவந்த தர்ஷன், நேற்று(பிப்ரவரி 1) மாலை வீட்டின் அறையில் அமர்ந்துகொண்டு காதில் ஹெட்ஃபோனை மாட்டி அதிக சத்தம் வைத்துக்கொண்டு 4 மணி நேரம் தொடர்ச்சியாக ஃபயர்வால் என்ற ஆன்லைன் கேம் ஆடியுள்ளார்.

ஆன்லைன் கேம் ஆடிக்கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்துள்ளார் மாணவன் தர்ஷன். உடனே அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பெற்றோர், மருத்துவமனையின் அறிவுறுத்தலின்பேரில் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு மாணவன் தர்ஷன் உயிரிழந்ததாக பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் கேம் ஆடிக்கொண்டிருந்த தனது மகன் உயிரிழந்ததையடுத்து, சோகத்துடன் சேர்த்து அதிர்ச்சியும் அடைந்த தர்ஷனின் தந்தை பச்சையப்பன், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் கேமின் அபாயம் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வளர்ப்பதுடன், மொபைலுடன் பிள்ளைகள் தனிமையில் இருக்க அனுமதிக்கக்கூடாது.
 

click me!