
22 கிலோமீட்டர்கள் சேசிங்கை தொடர்ந்து மாடு திருடி சென்ற ஐந்து பேர் கும்பல் குருகிராமில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சில நாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குர்கிராம் பகுதியின் சைபர் சிட்டியில் இந்த சம்பவம் அரங்கேறியது. வாகனம் ஒன்றில் மாடுகளை திருடி சென்ற கயவர்களிடம் வாகனத்தை நிறுத்த போலீசார் வலியுறுத்தி இருக்கின்றனர். எனினும், வாகனத்தை நிறுத்தாமலேயே திருடர்கள் வேகமாக செல்ல முற்பட்டனர். திருடர்களை துரத்தி சென்ற மாட்டு உரிமையாளர்கள், அவர்களின் வாகனத்தில் ஒரு சக்கரத்தின் டையர்களை பன்ச்சர் செய்தனர்.
கீழே விழுந்த மாடுகள்:
டையர் பன்ச்சர் ஆன போதும் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டு சென்றுள்ளனர். வழியில் வாகனங்கள் துரத்தி வந்ததை அடுத்து, திருடர்கள் மாடுகளை ஓடும் வண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இவ்வாறு செய்தால் துரத்தி வருவோர் திசை திரும்பலாம் என திருடர்கள் நினைத்துள்ளனர். எனினும், 22 கிலோமீட்டர் திருடர்களை துரத்தி சென்றுள்ளனர். அதன் பின் ஒரு கட்டத்தில் வாகனத்தை ஓட்ட முடியாமல் போனதை அடுத்து சாலையின் நடுவே வாகனம் நின்றுவிட்டது.
கைது:
வாகனத்தின் வேகம் குறைந்ததை பார்த்து சுதாரித்து கொண்ட போலீசார் திருடர்களை சுற்றி வளைத்து ஐந்து பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களின் வாகனத்தில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனத்தில் இருந்து மாட்டை கீழே தள்ளியவர்கள், மாட்டிக் கொண்ட பின் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தனர் என குர்கிராம் காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
கடுமையான சட்டம்:
முன்னதாக பலமுறை குர்கிராமில் மாடு திருடும் சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. ஹரியானா அராசங்கம் சார்பில் மாடுகள் திருடப்படுவதற்கு எதிராக கடுமையான சட்டங்களை அமலாக்கி இருக்கிறது. மேலும் மாடுகளை பாதுகாக்க சிறப்பு குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், அம்மாநிலத்தில் தொடர்ந்து இதுபோன்ற மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.