மகனுக்காக துடியாய் துடிக்கும் ஷாரூக்.... சிறப்பு நீதிமன்றம் துரத்தியதும் உயர்நீதிமன்றத்திற்கு ஓட்டம்..!

By manimegalai aFirst Published Oct 20, 2021, 5:15 PM IST
Highlights

சர்வதேச போதைக்கடத்தல் கும்பலிடம் இருந்து மொத்தமாக போதைமருந்துகளை வாங்க ஆர்யன் கான் முயற்சித்துள்ளார் என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச போதைக்கடத்தல் கும்பலிடம் இருந்து மொத்தமாக போதைமருந்துகளை வாங்க ஆர்யன் கான் முயற்சித்துள்ளார் என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் மகனை வெளியே கொண்டுவர இந்தி சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் மும்பையில் இருந்து கோவ சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்தில் கலந்துகொண்டதாக ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அவருடன் நண்பர்கள் சிலரும், ஒரு பெண்ணும் கைதாகினர். மேலும் இந்த வழக்கில் இதுவரை ஒரு நைஜீரியர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானை வெளியே கொண்டுவர அவரது குடும்பத்தினர் முதலில் கீழமை நீதிமன்றத்தை நாடினர். ஆனால் ஆர்யன் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்பதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஷாரூக்கான் குடும்பம் ஜாமீன் வேண்டி சிறப்பு நீதிமன்றத்தை நாடியது. ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதற்கான வலுவான ஆதாரங்களையும் முன்வைத்தனர்.

ஆர்யன் கான் வாட்ஸாப் உரையாடல்களை ஆய்வு செய்ததில் அவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும், மொத்தமாக போதைப்பொருட்களை வாங்க ஆர்யன் கான் முயற்சித்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சர்வதேச தொடர்புகள் இருப்பதால் உள்துறை அமைச்சகத்தின் உதவியையும் கோரியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆர்யன் கான் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்யன் காணின் நண்பர்கள், தோழியின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மகனை வெளியே கொண்டுவர பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஷாரூக் கான், சிறப்பு நீதிமன்றம் கைவிட்டதும் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் நீதி நிலைநாட்டப்படுமா என்பதை அறிய இருதரப்பிலும் ஆவலாய் உள்ளனர்.

click me!