
ரயிலில் வந்த ஒரு பெண் டாக்டரிடம், பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த ஒரு வாலிபர் ஆபாசமாக நடந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் டாக்டர்
சென்னை வேளச்சேரியை சேர்ந்த 43 வயது பெண் டாக்டர். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் கேரள மாநிலம் கண்ணனூர் செல்வதற்காக சென்னை - மங்களூர் செல்லும் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தார்.
ரயிலில் சில்மிஷம்
ரயில் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே ரயில் பெட்டியில் பயணித்த வாலிபர் ஒருவர், பெண் டாக்டரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர், இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
போலீஸ் கைது
இதில் அவர், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் காலதிங்கள் பாரப்பை பகுதியை சேர்ந்த ரபிக் (39) என்பதும் கோழிக்கோட்டில் வண்ண விளக்கு கடை உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரபிக் மீது ஈரோடு ரயில்வே போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.