நூதன முறையில் திருட்டு... இந்த வகை ஏடிஎம்.களில் பணம் எடுக்க எஸ்.பி.ஐ. வங்கி தடை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 22, 2021, 2:42 PM IST
Highlights

சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிகளின் பணம் டெபாசிட் செய்யும் ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிகளின் பணம் டெபாசிட் செய்யும் ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சின்மயா நகர் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் நூதன முறையில் பணம் மட்டும் எடுக்கப்பட்டது வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அங்கு சென்று சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி கேஷ் டெபாசிட் மெஷின்களில் பணத்தை எடுப்பது பதிவாகியுள்ளது. ஆனால், மெஷின்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தாலும் வங்கிகளில் அந்த கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக காட்டாததால், வங்கி அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இதேபோன்ற சம்பவம் ராமபுரம் வள்ளுவர் சாலை பகுதியில் உள்ள ஏ.டி.எம்மிலும், வேளச்சேரி விஜய நகர், தரமணி ஆகிய எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களில் அரங்கேறியிருப்பது தெரியவந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.20 லட்சம் வரை இந்த நூதன முறையில் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

எஸ்.பி.ஐ. வங்கியின் கேஷ் டெபாசிட் மெஷினில் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பின் நம்பர் செலுத்தினால், பணமானது வெளியே வரும். அவ்வாறு ஏ.டி.எம் மிஷினில் இருந்து வெளிவந்த பணத்தை 20 நொடிகளுக்குள் எடுக்கவில்லை எனில் மீண்டும் பணம் மெஷினுக்கு உள்ளேயே திரும்பிவிடும். 

இந்த தொழில்நுட்பத்தை அறிந்த கொள்ளையர்கள் பணம் மெஷினில் இருந்து வெளிவந்தவுடன், 20 நொடிகளுக்குள் பணத்தை எடுக்காமல் இருந்துள்ளனர். அதன்பின் பணம் மீண்டும் மெஷினுக்குள் செல்வதற்குள்ளாக, பணம் வெளியே வரும் அந்த வாயில் பகுதியில் ஷட்டரையும், சென்சாரையும் விரல்களை வைத்து தடுத்து நிறுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு செய்தால் பணத்தை எடுக்கவில்லை என நினைத்து வங்கி கணக்கிலேயே மீண்டும் அந்த தொகை வரவு வைக்கப்படும். இதில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

இதனிடையே எஸ்.பி.ஐ. வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் உடன் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆலோசன நடத்தினார். தற்போது எஸ்.பி.ஐ. டெபாசிட் மெஷினில் இருந்து பணம் எடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பணத்தை டெபாசிட் மட்டுமே செய்ய முடியும் என்றும், பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொள்ளையர்கள் குறிப்பாக எஸ்.பி.ஐ.வங்கியின் டெபாசிட் மெஷின்களை குறிவைத்து தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதால் இப்படியொரு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!