பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் கைது !! பல லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு !!

By Selvanayagam PFirst Published Dec 7, 2018, 10:45 AM IST
Highlights

கடன் தொகையை வசூலித்துத் தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்தவர் மெர்லின் தாமஸ். இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் இவர் மதுரையை சேர்ந்த நண்பர் முத்துகிருஷ்ணனுக்கு தொழில் தேவைக்காக 3 கோடி  ரூபாய் கடன் கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார். எனவே அவர் வாங்கிய கடனை திருப்பி தருமாறு மெர்லின் தாமஸ் அவரது குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க இயலாது என்று கூறிவிட்டனர்.

இதனால் மதுரையை சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் கடனை வசூலித்து தருமாறு மெர்லின்தாமஸ், அவரது அண்ணன் எபிநேசர் ஆகியோர் கேட்டுள்ளனர். அப்போது பணத்தை வசூலித்து கொடுப்பதற்கு ரூ.10 லட்சம் கமிஷன் தரும்படி வரிச்சியூர் செல்வம் கேட்டார். எனவே மெர்லின்தாமஸ் மதுரை அண்ணாநகர் பகுதியில் வைத்து ரூ.5 லட்சம் மற்றும் சொகுசு காரை வரிச்சியூர் செல்வம் உள்பட 3 பேரிடம் கொடுத்தார்.

ஆனால் அவர்கள் பணம், காரை வாங்கி கொண்டு முத்துகிருஷ்ணன் குடும்பத்தினரிடமிருந்து கடனை வாங்கி தரவில்லை. இதனால் மெர்லின்தாமஸ் தான் கொடுத்த பணத்தையும், காரையும் திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். அப்போது வரிச்சியூர் செல்வம் உள்பட 3 பேரும் பணத்தை தரமறுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டது குறித்து மெர்லின்தாமஸ் அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வரிச்சியூர் செல்வம் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் மதுரை அண்ணாநகர் கோமதிபுரத்தில் பதுங்கி இருந்த வரிச்சியூர் செல்வத்தை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மணிபாரதி, சுகுபாண்டி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்

click me!