சுங்கச்சாவடி காவலாளி அடித்துக்கொலை..! வழிப்பறி கொள்ளையனை வளைத்து பிடித்த காவல்துறை..!

By Manikandan S R SFirst Published Jan 25, 2020, 4:48 PM IST
Highlights

சென்னை சுங்கச்சாவடி ஊழியர் கொலைவழக்கில் வாலிபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அருகே இருக்கும் திருநின்றவூர் பிரகாஷ்நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடியில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வெங்கடேசன் பணியில் இருந்தார்.  சுங்கச்சாவடி அருகே சிவகுமார், நரேஷ்குமார் என இரண்டு லாரி ஓட்டுனர்கள் தங்கள் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். அதிகாலை இரண்டு மணியளவில் இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர்.

ஓய்வெடுத்து கொண்டிருந்த லாரி ஓட்டுனர்களை இரும்பு கம்பிகள் கொண்டு மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் சிவகுமாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர்களை மேலும் தாக்கிய மர்ம நபர்கள் செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளனர். சத்தம் கேட்டு வந்த காவலாளி வெங்கடேசன் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றுள்ளார். இதனால் அவரையும் இரும்பு கம்பி கொண்டு கொள்ளையர்கள் தாக்கினர் . இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பலியாகினார். பின் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் படுகாயங்களுடன் இருந்த சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வருகிற வழியில் பலரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

வெள்ளவேட்டில் இருவரை தாக்கி வழிப்பறி செய்த கொள்ளையர்கள், நெமிலிசேரியில் அசோக் என்பவரை தாக்கி புல்லெட் வாகனத்தை பறித்துள்ளனர். தொடர்ந்து சுங்கச்சாவடியிலும் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். வழிப்பறி மற்றும் கொலையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து அடையாளம் மற்றும் தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. இதனால் தனிப்படை அமைத்து காவலர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் திருநின்றவூரைச் சேர்ந்த சுரேஷ்(19) என்பவரை காவல்துறையினர் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தனது நண்பரான திருநின்றவூரைச் சேர்ந்த விஜய் என்பவருடன் சேர்ந்து கொலை,கொள்ளை போன்ற வழிப்பறி சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டது தெரிய வந்தது. அவ்வாறு வழிப்பறி செய்யும்போது தான் சுங்கச்சாவடி காவலாளி வெங்கடேசன் கொடூரமாக கொலைசெய்யப்பட்டார். இதையடுத்து சுரேஷ் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தலைமறைவாக இருக்கும் விஜயும் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.

Also Read:  'ஒரு நாள் தலைமையாசிரியர்'..! அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..!

click me!