தேனியை அடுத்து மதுரை மருத்துவ கல்லூரியில் சிக்கிய போலி மருத்துவ மாணவர்...

By sathish kFirst Published Sep 21, 2019, 1:28 PM IST
Highlights

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து ஆந்திராவைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் சேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்றார். கலந்தாய்வின் போது அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது. அதன்படி, அவர் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில், மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்துதேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரை விசாரிக்க மருத்துவ கல்வி இயக்ககம் நான்கு பேராசியர்கள் கொண்ட குழுவை அமைத்தது. அதேபோல் தேனி கண்டமனூர் விளக்கு போலீசில் மருத்துவ கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. மேலும் தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட மாணவனை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள உதித் சூர்யா மற்றும் அவரின் குடும்பம் தலைமறைவானது.

உதித் சூர்யா விவகாரத்தில் எத்தனை எத்தனை பேருக்கு தொடர்பு என்று தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில்,  மருத்துவக்கல்வி இயக்குநரகம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில் 2019 - 2020ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் நீட் தேர்வு புகைப்படம், கலந்தாய்வு புகைப்படம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து உடனடியாக ஆய்வறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரியின் துணை முதல்வர், துறை தலைவர் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு மூலம் ஒவ்வொரு மாணவர்களின் புடைப்படம் குறித்தும் தனித்தனியாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் விடுப்பில் உள்ள மாணவர்களை கல்லூரிக்கு வரவழைத்து புகைப்படங்களை சோதனை நடத்தவும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது மதுரையில், போலி மருத்துவ அனுமதி சான்றிதழ் கொடுத்து சேர்ந்து சிக்கியுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த ரியாஸ் என்ற மாணவர். 

அந்த மாணவர் கொடுத்த சேர்க்கை சான்றிதழ் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரை தல்லாகுளம் போலீஸில் ஒப்படைத்துள்ளது கல்லூரி நிர்வாகம், போலீஸார் ரியாஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியைச் சேர்ந்த கும்பல் ஒன்றுதான் இந்த போலியான மருத்துவ அனுமதி சான்றிதழை விநியோகித்துள்ளது. ஒரு சான்றிதழுக்கு ரூ. 60 லட்சம் வரை வசூல் செய்ததாக தெரிகிறது.

இதில் சுமார் 60 மாணவர்கள் வரை போலியான மருத்துவ அனுமதி சான்றிதழ்க்காக எமர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. டெல்லியிலுள்ள விக்ரம் சிங் என்ற நபரிடமிருந்து இந்த போலி சான்றிதழை வாங்கியுள்ளார் ரியாஸ். மோசடிக் கும்பல் டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்து போலி சான்றிதழை விநியோகித்துள்ளதும். இந்த கும்பலுக்கும் தேனியில் நடந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமோ என தல்லாகுளம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!