சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண வழக்கில் போலீஸ் எஸ்.ஐ அதிரடி கைது..! கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி

By karthikeyan VFirst Published Jul 1, 2020, 9:46 PM IST
Highlights

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணம் தொடர்பான வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய எஸ்.ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணம் தொடர்பான வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய எஸ்.ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொரோனா ஊரடங்கை மீறியதாக சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர் சாத்தான்குள காவலர்கள். 

அவர்கள் இருவரையும் போலீஸார் இரவு முழுக்க அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து போலீஸ் அடித்து துன்புறுத்தி, இருவரையும் கொலை செய்திருக்கிறார்கள் என்று ஜெயராஜின் மகளும் உறவினர்களும் நியாயம் கேட்டு போராட ஆரம்பித்தனர். 

அவர்களது போராட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இந்த வழக்கு. இந்த விவகாரம் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் காவல்துறையின் அத்துமீறலை கண்டித்தும் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோரும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தினர். அதனால் இந்த விவகாரம் தேசிய அளவை கடந்து, உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழக அரசு. 

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்துவருகிறது. இதுகுறித்த விசாரணைக்கு காவலர்கள் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என மாஜிஸ்டிரேட் குற்றம்சாட்டியிருந்தார். சிபிசிஐடி விசாரணையில், சாத்தான்குளம் காவல்நிலையைத்தில் தலைமை காவலர் ரேவதி, காவலர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை அடித்து துன்புறுத்தியதாக வாக்குமூலம் கொடுத்தார். அதேபோல, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடற்கூறாய்வில், அவர்கள் உடலில் காயங்கள் இருப்பது உறுதியானது. 

இந்நிலையில், மாஜிஸ்டிரேட்டின் விசாரணை அறிக்கை, உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் சாட்சிகளின் தகவலின்படி, ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் மரணமடைந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குகளையும் கொலை வழக்குகளாக மாற்றியுள்ளது சிபிசிஐடி. 

அதுமட்டுமல்லாமல் சாத்தான்குளம் காவல்நிலையை உதவி ஆய்வாளர்(எஸ்.ஐ) ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

click me!