வண்டாய் பறக்கும் முருகன்... லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையில் காவல்துறையினர் வெளியிட்ட புதிய தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Oct 5, 2019, 5:41 PM IST
Highlights

ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த சம்பவத்தில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தூய வளனார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில், லலிதா ஜூவல்லரி 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடையின் சுவரில் பெரிய துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள்  13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றனர். பொம்மை முகமூடி அணிந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய அந்த கும்பல், மோப்ப நாயை ஏமாற்றுவதற்காக, கடையின் பின் பக்கத்திலும், சுவரில் துளையிடப்பட்ட பகுதியிலும் மிளகாய் பொடியை தூவிச் சென்றிருந்தனர்.

வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்நிலையில் மணிகண்டன் என்பவரை மட்டுமே கைது செய்துள்ளதாகவும், கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சுரேஷ் என்பவரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்தவர்களில் இருவர், பைக்கில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், அதன் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். 

click me!