இறந்த இளம் பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரணை... சரக்கு போதையில் உளறிய கும்பல்!!

By sathish kFirst Published Aug 1, 2019, 12:57 PM IST
Highlights

தூக்கிட்டு இறந்த இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

தூக்கிட்டு இறந்த இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடலூர் முதுநகர் அருகே உள்ள ஜி.என்.குப்பம் ராணிகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் வெண்மதி(வயது 17). பிளஸ்-2 படித்துள்ளார். இவர் கடந்த மாதம் 17-ந் தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அப்போது அவரது உடலில் இருந்த காயங்களை பார்த்த, அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அங்கிருந்த சிலர், மரத்தில் தூக்கில் தொங்கியதால் அதில் உரசியதில் உடலில் காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொன்னதால் இதை நம்பிய ஆறுமுகம் குடும்பத்தினர், வெண்மதி தற்கொலைதான் செய்து உள்ளார் என்று நினைத்து உடலை அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் சரக்கு போதையில், வெண்மதியின் தங்கை லட்சுமியிடம் உன் அக்காவை கொலை செய்தது போல் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர் தனது தந்தை ஆறுமுகத்திடம் கூறினார். இதனால் ஆறுமுகத்திற்கு தனது மகள் சாவில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து கடலூர் சப்-கலெக்டரிடம் அவர் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் முதுநகர் போலீசாருக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ராணி காலனி பகுதி சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த வெண்மதியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் தாசில்தார் முன்னிலையில் வெண்மதியின் உடலை தோண்டி எடுத்தனர். தொடர்ந்து டாக்டர்கள் பாக்கியலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இளம் பெண்ணின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, மீண்டும் அங்கு அடக்கம் செய்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் ராணிகாலனியை சேர்ந்த  பிரசாந்த், விஜயகாந்த், விவேகானந்தன்,இளையராஜா ஆகியோரை பிடித்து போலீசார் தங்கள் ஸ்டைலில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், வெண்மதியின் உறவினர் பையனான பிரசாந்த்  அவரை பிரசாந்த் ஒன் சைடாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இதனடிப்படையில் வெண்மதி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், வெண்மதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இதன் அறிக்கை வந்தபின்னர் தான் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்த விவரம் தெரியவரும். மேலும் இது தொடர்பாக 4 பேரிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவில் இந்த வழக்கில் உள்ள மர்மங்கள் விலகும் என்று தெரிவித்தனர்.

click me!