புதுச்சத்திரம் பெட்ரோல் பங்க், டாஸ்மாக் கொள்ளை….. குற்றவாளிகள் அதிரடி கைது !!!

By Selvanayagam PFirst Published Dec 28, 2018, 8:51 PM IST
Highlights

சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்த வழக்கிலும், சிதம்பரம் புறவழிச்சாலையில் நடந்த வழிப்பறி சம்பவத்திலும்  தொடர்புடைய, புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை சிதம்பரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் கைது செய்தார்.

சிதம்பரம்-கடலூர் சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்குக்கு நேற்று இரவு 9 மணியளவில், 3 பேர் ஒரு பைக்கில் வந்துள்ளனர். பைக்கிற்கு பெட்ரோல் போட்ட பின்னர், 3 பேரும் ஊழியர் சிவசங்கரனுடன் ஏதோ பேசுகின்றனர்.

பின்னர் பைக்கில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவன் இறங்கி அரிவாளால் ஊழியர் சிவசங்கரனை வெட்டுகிறான். அப்போது மற்றொருவனும் பைக்கில் இருந்து இறங்கி ஊழியர் சிவசங்கரன் கையில் இருந்த பணப்பையை பறிக்க முயற்சிக்கிறான்.

ஊழியர் பணப்பையை தர மறுக்கும்போது அவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுகிறது. சிவசங்கரன் நிலைகுலைந்த பிறகு, 3 பேர் கும்பல் பணப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையாக போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார், சாமியார் பேட்டை அருகே உள்ள பீச் ரோட்டில் வைத்து 3 குற்றவாளிகளையும் பிடித்தனர். புதுச்சேரி தவளகுப்பம் அருகில் உள்ள கரிகாலன்குப்பத்தை சேர்ந்த அவர்களிடமிருந்து பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த 3 பேரும் நேற்றுமுன்தினம் சிதம்பரம் புறவழிச் சாலையிலும் ஒரு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட செல்போன், பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் டி.எஸ்.பி. பாண்டியன், பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளே குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உதவியாக இருந்ததாகக் கூறினார்.

இதில் கைது செய்யப்பட்ட சுரேஷ்  என்பவர் போலீசுக்கு பயந்து ஓடும் போது கீழே விழுந்து கையில் அடிபட்டதும், போலீசிடம் இருந்து தப்பிக்க மொட்டை அடித்துக் கொண்டு மாறுவேடத்தில் சுற்றியதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது..

click me!