அங்கன்வாடியில் தலித் பெண்கள் எங்க குழந்தைகளுக்கு சமையல் செய்வதா ? வேண்டவே வேண்டாம் !! போராடும் கிராம மக்கள் !!

By Selvanayagam PFirst Published Jun 13, 2019, 8:36 PM IST
Highlights

மதுரை அருகே வலையபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இரண்டு தலித் பெண்கள் சத்துணவு அமைப்பாளராகவும், சமையலராகவும் நியமிக்கப்பட்டதற்கு அந்த கிராம மக்கள்  கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சுமார் 1,500 அங்கன்வாடி காலிப்பணியிடங்களை மதுரை கலெக்டர் நாகராஜன் கடந்த 3-ந் தேதி நிரப்ப உத்தரவிட்டார். அதன்படி எவ்வித சிபாரிசுமின்றி தகுதியின் அடிப்படையில் அங்கன் வாடி பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வலையபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு தலித் வகுப்பைச் சேர்ந்த ஜோதி லட்சுமி அமைப்பாளராகவும், அன்னலட்சுமி சமையலராகவும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்திற்கு அப்பகுதியில் உள்ள இன்னொரு சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் அங்கன்வாடி மையத்தில் பெண் ஊழியர்கள், குழந்தைகளுக்கு தேவையான உணவுப்பொருட்களை சமைத்து குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்தனர். ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் தலித் பெண் ஊழியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுத்து விட்டனர்.

தலித் பெண்கள் சமைப்பதை எங்கள் வீட்டு குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று கூறி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் தலித் பெண் ஊழியர்களான ஜோதி லட்சுமி மதிப்பனூருக்கும், அன்னலட்சுமி கிழவனேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக ஜோதி லட்சுமி கூறுகையில், எனது சொந்த ஊரில் பணி செய்யலாம் என்ற ஆர்வத்தை சிலர் ஜாதியை கூறி தடுத்து விட்டனர். அது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் எங்கு பணியாற்றினாலும் சிறப்பாக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.

பெண் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்போது வலையப்பட்டி அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதன் பின்னணியில் கடந்த 8-ந் தேதி வலையபட்டி கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதலும் நடைபெற்றது. இதில் வீடுகள் தாக்கப்பட்டன.எனவே போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

click me!