நிர்பயா கொலைக்குற்றவாளிகளை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, 2012-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங் மற்றும் பவன் குப்தா ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதிசெய்தது. தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் இவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மற்றும் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இவர்களது தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்காக அவர்கள் திகார் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
undefined
இந்தநிலையில் குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கருணை மனுவை அனுப்பினார். இதன் காரணமாக தூக்குத்தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த உள்துறை அமைச்சகம், அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதன் படி முகேஷ் சிங்கின் கருணை மனுவையும், உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி, முகேஷ் சிங்கின் கருணை மனுவினை நிராகரிப்பதாக அறிவித்தார்.
அதேபோன்று, இந்தக் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதி, நேரம் குறித்த உத்தரவை பிறப்பிக்குமாறு திகார் சிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், நிர்பயா கொலைவழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்தத் தூக்குத்தண்டனைக்காக நாடே எதிர்பார்த்துக் காத்திருந்தது. இந்தநிலையில், குற்றவாளிகளில் வேறு யாரேனும் ஒருவர் மீண்டும் கருணை மனுவைத் தாக்கல் செய்தால் தண்டனை நிறைவேற்றும் தேதியில் மாற்றம் ஏற்படுமா என்னும் சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.