நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… அதிடிரயாக 2 பேர் கைது !!

By Selvanayagam PFirst Published Jul 24, 2019, 10:02 PM IST
Highlights

திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கொலை நடப்பதற்கு முன்பு அப்பகுதியில் சுற்றித் திரிந்த 2 பேரை  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்., 

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமா மகேசுவரி. 62 வயதான  இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது கணவர் முருகசங்கரன் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இவர்களது வீடு பாளையங்கோட்டை ரோஸ் நகரில் உள்ளது. உமா மகேசுவரி நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். 

உமா மகேசுவரியின் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரியம்மாள்  என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். மாரியம்மாள்  நேற்று காலை வழக்கம்போல் உமா மகேசுவரியின் வீட்டுக்கு வேலைக்கு வந்தார். அவர் தினமும் வேலையை முடித்துவிட்டு மதியம் வீட்டுக்கு சாப்பிட செல்வது வழக்கம்.

ஆனால் நேற்று மதியம் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பிவரவில்லை. இதனால் அவருடைய தாயார் வசந்தா தனது மகளை தேடி உமா மகேசுவரியின் வீட்டுக்கு வந்தார்.

அப்போது அங்கு உமா மகேசுவரி, முருகசங்கரன், மாரி ஆகிய 3 பேரும் வெவ்வேறு அறைகளில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். முருகசங்கரன், உமா மகேசுவரி ஆகியோர் மார்பு மற்றும் முதுகில் கத்தியால் குத்தப்பட்டும், மாரி தலையில் இரும்பு கம்பியால் அடித்தும் கொல்லப்பட்டு கிடந்தனர்.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் இது நகைகளுக்காக நடந்த கொலைகள் போலவே தெரிகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் 3 அல்லது 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலைகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும்  வீட்டின் பின்பக்க வாசலில் கிடைத்துள்ள  சில கைரேகைகள் அடிப்படையிலும் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை நடந்த போது வீட்டின் அருகே சுற்றிய இருவரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  கொலை தொடர்பாக ஏற்கனவே 3 பெண்கள் உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!