நீண்ட நாட்களாக நடந்து வரும் கோகுல்ராஜ் கொலை வழக்கு தற்போது இறுதி கட்ட விசாரணையை எட்டியிருக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், நாமக்கல்லை சேர்ந்த சுவாதியை காதலித்து வந்தார். இருவரும் 23.6.2015 ல் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருவரையும் மிரட்டி உள்ளார். பிறகு ஸ்வாதியை அனுப்பிவிட்டு கோகுல்ராஜை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார்.
மறுநாள் கோகுல்ராஜ் நாமக்கல் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் சங்ககிரியை சேர்ந்த ‘தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை’ நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட தலைமறைவுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார்கள். இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியாவும் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். இதையடுத்து இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது.
நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணையும் தொடங்கியது. இந்த கோகுல்ராஜ் வழக்கில் காதலி சுவாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்ற கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது . இதன்பின்னர் அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது 2019ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இறுதிக்கட்ட விசாரணை எட்டியிருக்கும் இந்த வழக்கில் நேற்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது கைது செய்யப்பட்ட யுவராஜ் மற்றும் அவரதுகூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.