
தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை கொண்டாடி தீர்த்த முஸ்லீம் நபர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உத்திர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்று இருக்கிறார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அம்மாநிலத்தின் கத்தர்கர்ஹி பகுதியை சேர்ந்த பாபர் அலி பா.ஜ.க. கட்சியை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.என். பதாக் ஆதரவாக வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதுதவிர தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு கட்சி பணிகளிலும் பாபர் அலி மேற்கொண்டு வந்தார்.
பா.ஜ.க. அமோக வெற்றி:
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. பாபர் அலி தொகுதியில் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.என். பதாக் வெற்றி பெற்றார். இதை அடுத்து வெற்றி கொண்டாட்டத்தில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாபர் அலியும் பா.ஜ.க. வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதோடு வெற்றி மிகுதியில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் இட்டப்படி காணப்பட்டார்.
பாபர் அலி பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது மட்டுமின்றி, வெற்றி கொண்டாட்டத்தின் போது ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷமிட்டதை அடுத்து அவரின் உறவினர்கள் கடும் கோபம் அடைந்தனர். முன்னதாக பாபர் அலியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் இவரின் நடவடிக்கைகளை கைவிட விலியுறுத்தினர். எனினும், பாபர் அலி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
உறவினர்கள் தாக்குதல்:
இதை அடுத்து பாபர் அலி உறவினர்கள் அவரை தாக்க திட்டமிட்டனர். இதேபோன்று திட்டமிட்டப்படி மார்ச் 20 ஆம் தேதி பாபல் அலியை அவரது உறவினர்கள் கடுமையாக தாக்கினர். ஒருகட்டத்தில் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் மேற்கூரை மீது பாபர் அலி ஏறினார். பின் மேற்கூரையின் மீது ஏறிய உறவினர்கள் அவரை அங்கிருந்து தூக்கி கீழே விசினர்.
இதில் கடுமையாக தாக்கப்பட்ட பாபர் அலி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாபர் அலி கடந்த மார்ச் 25 ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதை அடுத்து பாபர் அலியை தாக்கிய உறவினர்கள் மீது அவரின் மனைவி பாத்திமா கத்தூன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை அடுத்து அசிமுல்லா, ஆரிஃப், சல்மா மற்றும் தாஹித் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடவடிக்கை:
இவர்களில் ஆரிஃப் மற்றும் தாஹித் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பாபர் அலியின் சகோதரர் சந்தே அலாம் மற்றும் பாத்திமா ஏற்கனவே பாபர் அலி உறவினர்கள் இப்படி செய்யலாம், முன்கூட்டியே நடவடிக்கை எடுங்கள் என காவல் துறையினரிடம் தாங்கள் முறையிட்டதாகவும், காவல் துறை தங்களின் புகாருக்கு செவி சாய்க்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
பாபர் அலி உயிரிழந்ததை அடுத்து அவரின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த உறவினர்கள், தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி பாபர் அலி சடலத்தை அடக்கம் செய்ய மறுத்தனர். பின் சட்டமன்ற உறுப்பினர் பி.என். பதாக் மற்றும் இதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பாபர் அலி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாபர் அலி மறைவுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கலை தெரிவித்தார்.