பிரபல பெண் எம்.எல்.ஏ., மகன் கொலை! தண்டவாளத்தில் உடல் வீச்சு!

First Published Aug 4, 2018, 3:52 PM IST
Highlights

பீகார் மாநிலத்தில், பெண் எம்எல்ஏ., ஒருவரின் மகன் கொடூரமாக கொல்லப்பட்டு, ரயில்வே ட்ராக்கில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில், பெண் எம்எல்ஏ., ஒருவரின் மகன் கொடூரமாக கொல்லப்பட்டு, ரயில்வே ட்ராக்கில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில், ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ., பீமா பாரதியின் மகன் தீபக் என்பவரே கொல்லப்பட்ட நபர். தீபக்கின் உடல் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் அருகே நாளந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலையம் அருகே இன்று (ஆகஸ்ட் 3) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆங்கில ஊடகங்கள் தொடர் செய்தி வெளியிட்டு வருகின்றன.
 
இந்த கொலை சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள பாட்னா டி.ஐ. ஜி.ராஜேஷ் குமார், " கொலைக்கான காரணம் இப்போதுவரை தெரியவில்லை, உடற்கூறு ஆய்வு முடிவு கிடைத்த பிறகே காரணம் தெரியவரும் " என்று குறிப்பிட்டுள்ளார். தீபக்கின் உடல் கிடைத்த இடத்தில், மோப்பநாய் மூலம் துப்பு துலக்கி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தீபக் தனது நண்பரின் பார்ட்டியில் கலந்துகொண்டு திரும்புகையில் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 
தீபக்கின் தந்தை பீமா பாரதி ரூபாவுலி சட்டசபை தொகுதியின் உறுப்பினர். மகனின்  மரணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், " நிச்சயமாக இது தற்கொலை அல்ல. எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளான்" என்று தெரிவித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு பீமா பாரதியின் கணவர் அவதேஷ் மண்டலின் பெற்றோர் கொலை செய்யப்பட்டனர். அந்தக் கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தீபக் கொலையில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  மேலும், சங்கர் மண்டல், சந்தன் சிங், சந்தோஷ் மண்டல், ராஜேஷ் மண்டல் மற்றும் முகுல் மண்டல் ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதாக, அவதேஷ் மண்டல் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
 
இறந்த தீபக்கின் உடலில் காயங்கள்  உள்ளதால், அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொலை பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

click me!