தமிழக காவல் துறையில் 350 கோடி ஊழல்..!! அதிமுகவுக்கு செக் வைக்கும் எதிர்கட்சி எம்.பி..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 14, 2019, 1:18 PM IST
Highlights

ஊழலில் ஊறித் திளைத்துக் கிடக்கின்ற அ.இ.அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் பட்டியலில் இதுவும் இடம்பெற்றுள்ளது. ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை அளிப்பதற்கு, அ.இ.அ.தி.மு.க. அரசு, காவல்துறைக்கு தகவல் தொடர்புக் கருவிகள் வாங்கியதில் 350 கோடி ஊழல் நடத்தப்பட்டு இருப்பது குறித்து, உடனே உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
 

காவல்துறையில் 350 கோடி ரூபாய் அளவிற்கு  ஊழல் நடத்தியுள்ள குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,  தமிழகக் காவல்துறைக்கு ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் 88 கோடி ரூபாய் ஊழல் நடந்தது குறித்தும், இதில் 11 விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாகவும், உள்துறைச் செயலாளர் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால் அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 தற்போது இன்னொரு ஊழலை ‘த டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (13.11.2019) வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றது. அ.தி.மு.க. அரசின் ஊழல் விவகாரத்தை அடி முதல் நுணி வரை அலசி உள்ள இந்த ஏட்டின் செய்திக் கட்டுரை, தமிழக அரசில் புரையோடிக் கிடக்கின்ற ஊழலை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழகக் காவல்துறைக்கு, கேமரா, சி.சி.டி.வி., டிஜிட்டல் மொபைல் உள்ளிட்ட தகவல் தொடர்புக் கருவிகள் கொள்முதல் செய்யும் ரூ.350 கோடி பணி ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருக்கின்றது. 

இந்த ஊழல் குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் தகவல் வந்ததை அடுத்து, தொழில்நுட்ப சேவைகள் பிரிவு காவல்துறை தலைமைத் துணை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) விசாரணை மேற்கொண்டார். இந்த ஊழலில் அடிப்படை உண்மை இருப்பதாக, காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) டி.கே. இராசேந்திரனுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டது. தாம் பதவி விலகும் வரையில் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத டி.ஜி.பி., அதனை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் அசோக்குமார் தாஸிடம் ஒப்படைத்துச் சென்றார். 

 புதிய டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதியும், ஊழல் ஒழிப்புத் துறை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த மெகா ஊழல் குறித்து விசாரணை நடத்த, செப்டம்பர் மாதம் கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குநரகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் டி.வி.ஏ.சி. இன்னும் விசாரணையை தொடங்காமல் அலட்சியமாக இருப்பதற்கு என்ன காரணம்?  ஊழலை மூடி மறைக்க முயற்சிப்பவர்கள் யார்? இந்த ஊழலில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ள மாநில உள்துறை காவல்துறை (தொழில்நுட்ப சேவைகள்) கண்காணிப்பாளர் எம். அன்புச் செழியன் மீது ஏன் இதுவரையில் மாநில உள்துறை  விசாரணை மேற்கொள்ளப்படவில்லை? இதற்கு இடையில், அமைச்சகப் பணியாளர்கள் கண்காணிப்பாளரான ராஜன் சிங், தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு ஆவணங்கள் காப்பாளராக இராமநாதபுரத்திற்கு பணி மாறுதல் செய்துள்ளனர். அன்புச் செழியன் அளித்த பணி ஒப்பந்தங்கள் குறித்து, ஒப்பந்ததாரர்களிடமும் ஊழல் ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கின்றனர். 

அன்புச் செழியன், 2013 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற பணி ஒப்பந்தங்களை ஆய்வு செய்யும் குழுவில் இடம்பெற்று, ஒப்பந்தங்களின் தகுதிகளை நிர்ணயம் செய்யும் முக்கியப் பொறுப்பில் நீடித்து வருகின்றார்.  மேலும் தகவல் தொடர்பு கருவிகளின் தரத்தை ஒப்பிட்டு முடிவு செய்யும் பொறுப்பும் இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இந்த ஊழலில் தொடர்புடைய மேலும் இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குத் தொடர மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மற்றும் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை என்பதையும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு சுட்டிக்காட்டி உள்ளது. 

மேற்கு வங்க ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தூத்துக்குடி துறைமுக அறக்கட்டளைத் தலைவராக இருந்தவருமான ஏ.சுப்பையா மற்றும் மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பில் இருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார்  இருவரையும் தமிழக அரசு விசாரிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அந்நாளேடு கேள்வி எழுப்பி உள்ளது. ஊழலில் ஊறித் திளைத்துக் கிடக்கின்ற அ.இ.அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் பட்டியலில் இதுவும் இடம்பெற்றுள்ளது. ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை அளிப்பதற்கு, அ.இ.அ.தி.மு.க. அரசு, காவல்துறைக்கு தகவல் தொடர்புக் கருவிகள் வாங்கியதில் 350 கோடி ஊழல் நடத்தப்பட்டு இருப்பது குறித்து, உடனே உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
 

click me!