தொண்டு நிறுவனம் நடத்துவதாக இளம்பெண்களை மயக்கி அத்துமீறல்..! புதுமணப்பெண்ணை கடத்த முயன்ற போலி சமூக சேவகருக்கு தர்ம அடி..!

By Manikandan S R SFirst Published Oct 18, 2019, 5:18 PM IST
Highlights

தொண்டு நிறுவனம் நடத்துவதாக கூறி இளம்பெண்களை மயக்கி பேசி வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தொராயன்மலை அடுத்து இருக்கிறது சென்னிமலை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் தங்கமணி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் இருக்கின்றனர். தங்கமணி அந்த பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்மூலம் வாட்ஸப் குழுவை உருவாக்கி ஏராளமான இளம் பெண்களை அதில் இணைத்துள்ளார். இந்த நிலையில் தங்கமணியின் வீட்டின் அருகே ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற இளம்பெண் வசித்து வந்திருக்கிறார். அவரை தனது தொண்டு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் வேலைக்கு அமர்த்துவதாக கூறி அவரையும் வாட்ஸப் குழுவில் இணைத்து இருக்கிறார். பின்னர் அவரிடம் தினமும் தொலைபேசியில் மற்றும் வாட்ஸப்பில் உரையாடி வந்திருக்கிறார். அந்தப்பெண்ணின் நலனில் அதிக அக்கறையுடன் இருப்பதுபோல் தங்கமணி செயல்பட்டுள்ளார்.

இதனிடையே அந்த பெண்ணிற்கு சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. திருமணம் முடிந்ததும் ரேவதி கணவருடன் சென்று விடக்கூடாது என்று நினைத்த தங்கமணி திருமணத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் சில காரியங்களை செய்திருக்கிறார். மணமகனை பற்றி பெண் வீட்டிற்கும் மணமகளை பற்றி மாப்பிள்ளை வீட்டுக்கும் மாறி மாறி அவதூறு கூறியிருக்கிறார். ஆனாலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அந்த பெண் கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

அதன்பிறகும் தினமும் அந்த பெண்ணுடன் தொலைபேசியில் தங்கமணி பேசி வந்திருக்கிறார். இரவு நீண்ட நேரம் அவருடன் பேசி கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவு நிகழாமல் தங்கமணி தடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஏமாற்றமடைந்த வெங்கடேசன் தனது மனைவியை கண்டித்திருக்கிறார். இதனால் ரேவதி தங்க மணியுடன் பேசுவதை தவிர்த்திருக்கிறார். ஆனாலும் விடாமல் அவருடன் தங்கமணி பேசிவந்துள்ளார்.இதன்காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வந்திருக்கிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை வந்த தங்கமணி, ரேவதியையும் அவரது கணவர் வெங்கடேசனையும் சமாதானம் செய்து இருக்கிறார். பின்னர் இருவரையும் தேனிலவிற்கு அழைத்து செல்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில் வெங்கடேசனை காரில் வைத்துவிட்டு ரேவதியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று தங்கமணி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார்.

இதன்பிறகு கடந்த வியாழக்கிழமை பாலாஜி என்பவருடன் காரில் தங்கமணி, வெங்கடேசன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கே ரேவதியை வெளியே வரச்செய்து காருக்குள் தள்ளி அவரை கடத்த முயன்றிருக்கிறார். இதனால் ரேவதி அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டுள்ளார். உடனே வெங்கடேசனும் அவரது உறவினர்களும் தங்கமணியின் காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். தங்கமணியையும் பாலாஜியும் சரமாரியாக தாக்கிய அவர்கள் மாதாவரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தான் சமுக சேவை செய்வதாக கூறி தொண்டு நிறுவனம் நடத்தி ஏராளமான இளம்பெண்களை மயக்கி பேசியது தெரியவந்தது. இதையடுத்து தங்கமணியையும் பாலாஜியையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தொண்டு நிறுவனம் நடத்துவதாக கூறி இளம்பெண்களை மயக்கி பேசி வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!