ஐயர் சாதி பெயரில் சிக்கன் விற்ற ஓட்டல்... மன்னிப்புக் கோரிய மதப்பிரச்னையாளர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Aug 2, 2019, 2:59 PM IST
Highlights
ஓட்டல் மெனுவில் இடம்பெற்ற ஐயர் சிக்கன் என்பது சர்ச்சையாகி, அந்த ஓட்டலுக்கு விளம்பரம் தேடித் தந்திருக்கிறது.

மதுரையில் வடக்கு மாசி வீதியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது அசைவ உணவகமான ஹோட்டல் மிளகு. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் இந்த அசைவ உணவகத்தில் பெரிதாக வியாபாரம் இருப்பதில்லை. 

கும்பகோணம் ஐயர் காபி என்று விளம்பரப்படுத்தி வந்த தமிழகத்தில், கும்பகோணம் ஐயர் சிக்கன் என சொல்லித்தான் பார்ப்போமே என்று வணிக ரீதியிலாக சிந்தித்து, முகநூல், வாட்ஸ்-ஆப் போன்ற வலைத்தளங்களில், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, விளம்பரம் என்ற பெயரில்  நூல்விட்டுப் பார்த்தது மதுரையில் உள்ள மிளகு ஓட்டல். அவர்கள் நினைத்தது போலவே, ஓட்டல் மெனுவில் இடம்பெற்ற ஐயர் சிக்கன் என்பது சர்ச்சையாகி, அந்த ஓட்டலுக்கு விளம்பரம் தேடித் தந்திருக்கிறது.

முதலில் 007 சிக்கன் என்றுதான் ஒரு ஸ்பெஷல் அயிட்டத்துக்குப் பெயர் வைத்திருந்தனர். அது எடுபடவில்லை. உணவில் தரமும் சுவையும் இருந்தால், வாடிக்கையாளர்கள் தானாகத் தேடி வருவார்கள் என்பதை அறிந்திருந்தும்,  ‘சீப் பப்ளிசிடி’ தேடும் விதத்தில், வேண்டுமென்றே கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் ஸ்பெஷல் அயிட்டம் ஒன்றை தங்கள் மெனுவில் சேர்த்து வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி இருந்தனர். பலரும் அசைவம் பக்கமே திரும்பாமல், சைவம் என்ற தங்களது கொள்கையில் மிக உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக, பிராமணர்களில் பெரும்பாலானோர் சைவத்தை தீவிரமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

மதுரையில் மிளகு ஓட்டல் நடத்துபவர்கள், பிராமணர்களின் இந்த சைவைக் கொள்கையில்தான் உரசிப் பார்த்துவிட்டனர். இந்நிலையில், இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் அழகர்சாமி உட்பட 5 பேர் சர்ச்சைக்குள்ளான ஹோட்டலுக்குள் இன்று திடீரென  சென்றனர். உடனடியாக "கும்பகோனம் ஐய்யர் சிக்கன்" வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திலகர் திடல் காவல் ஆய்வாளர் புளோரா சீலா தலைமையிலான போலீசார் ஓட்டலுக்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ஹோட்டல் மேலாளர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததை அடுத்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.
 

click me!