1,00,00,000 மதிப்பிலான தங்க நகைகள் மாயம்... கூண்டோடு சிக்கிய தனியார் வங்கி ஊழியர்கள்...!

By vinoth kumarFirst Published Aug 23, 2019, 11:31 AM IST
Highlights

திருவண்ணாமலை தனியார் வங்கியில் அடகு வைத்த 1.16 கோடி மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக, வங்கி மேலாளர் உட்பட 7 ஊழியர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை தனியார் வங்கியில் அடகு வைத்த 1.16 கோடி மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக, வங்கி மேலாளர் உட்பட 7 ஊழியர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரே உள்ள சன்னதி தெருவில் கரூர் வைஸ்யா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பல தரப்பினரும் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். பலர் தங்கள் நகைகளையும் அடமானம் வைத்துள்ளனர். வங்கியில் மாதத்திற்கு இருமுறை அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். 

இந்நிலையில் கடந்த மே மாதம் இறுதியில் வங்கியில் உள்ள தங்க நகைகளை சரிபார்க்கும் போது வாடிக்கையாளர்கள் வைத்த தங்க நகைகள் அடங்கிய 40 பாக்கெட்கள் கணக்கில் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகைகளின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாயாகும். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

புகாரின் அடிப்படையில் போலீசார் மற்றும் வங்கியில் உயர் அதிகாரிகள் குழுவினர் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது, நகை அடகு வைத்தவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, கணக்குகளை முடித்திருப்பதும், வங்கி விதிமுறையை மீறி 25 லட்சத்துக்கும் அதிகமாக தனிநபர் நகைக்கடன் வழங்கியிருப்பதும், லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்த 1.16 கோடி மதிப்பிலான 3,710 கிராம் அடகு நகைகள் மாயமானதும் தெரியவந்தது.

 

மேலும், கடந்த மே 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலான சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதும் தெரியவந்தது. எனவே, வங்கியின் முதுநிலை மேலாளர் மற்றும் அனைத்து ஊழியர்கள் கூட்டு சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என வங்கியின் விசாரணை குழு முடிவு செய்தது. இதையடுத்து, வங்கியின் முதுநிலை மேலாளர் சுரேஷ், நகை கடன் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளர் சாந்தன அரிவிக்னேஷ் மற்றும் லாவண்யா, தேன்மொழி, இசைவாணி, கார்த்திகேயன், மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

click me!