
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். உள்துறை செயலாளர், டிஜிபி அடங்கிய மாநில குழு மற்றும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அடங்கிய மாவட்ட குழுக்களை அமைத்த சட்டத்தை திருத்த போதிய அவகாசம் வழங்கியும் திருத்தவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர்கள் தரப்பில் காவல் நிலைய மரணங்களில் 2018 கணக்கின் தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், 76 காவல் மரணங்கள் 5 ஆண்டுகளில் நடந்தும், ஒரு வழக்கில் கூட தண்டனை விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. . தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதால் தமிழக அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், உள்துறை செயலாளர் தான் குழுவை தலைமை வகிக்கிறார் என்றும், அவர் காவல்துறை சார்ந்தவர் இல்லை என்பதாலும் அவர் தலைமையில் குழு அமைத்ததில் எந்த தவறும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் பஞ்சாப், சட்டீஸ்கர், ஹரியாணா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இல்லாமல் குழுக்களை அமைத்துள்ளதாகவும், இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் வாதிடப்பட்டது.
அப்போது நீதீபதிகள், எந்த காரணத்திற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ அதற்கு எதிராக அரசின் சட்டம் உள்ளதாகவும், உச்ச நீதிமன்ற நிலுவை காரணமாக நீதிபதியை தலைவராக நியமிக்க முடியாது என கூற முடியாது என்றும் விளக்கம் அளித்தன. விசாரணை கைதிகளை அழைத்து வரும்போது இரக்கமற்று தாக்குவது, அதனால் ஏற்படும் மரண குற்றங்கள் ஆகியவை காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என்றும் கடுமையாக சாடினர். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க அரசு அஞ்சுகிறதா என்றும், கேள்வி எழுப்பினர். காவல்துறை போர்வையில் காவல்துறையிலேயே கும்பலை உருவாக்குகிறார்கள் என்றும், அவற்றின் காவல் மரணம், நில அபகரிப்பு, கொலை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர் என்றும் வேதனை தெரிவித்தனர். இதுபோன்ற கொடுங்குற்றங்களில் நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு தேவை என்றும், உச்ச் நீதிமன்ற வழிகாட்டுதல்படி அமைத்தால் நல்ல நிர்வாகத்தை தான் காட்டுவதாக அமையும் என்றும், அரசுக்கு எதிரான உத்தரவாக அல்லாமல், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரானதாக மட்டுமே கருத வேண்டுமென தெரிவித்து, மாநில அரசே நல்ல முடிவெடுத்து முறையான புகார் ஆணையத்தை அமைக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 24ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.