
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளை சரமாரியாக தாக்கிய குற்றத்திற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தின் கடூரியன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நான்காவது வகுப்பு பயின்று வரும் மாணவிகளில் இரண்டு பேர் சம்பவத்தன்று ஒருவர் நெற்றியில் திலகம் வைத்துக் கொண்டும், மற்றொருவர் நிகாப் (தலையில் முக்காடு) அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதை பார்த்ததும் ஆத்திரமடைந்த வகுப்பு ஆசிரியர் நிசர் அகமது இரு மாணவிகளையும் வகுப்பறையில் வைத்து மிக கடுமையாக தாக்கி இருக்கிறார். மேலும் இரு மாணவிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டினார் என கூறப்படுகிறது. நெற்றியில் திலகம் அணிந்து வந்த மாணவியின் வீட்டில் நவராத்திரி கொண்டாடப்பட்டதால், அவர் அப்படி வந்துள்ளார்.
வீடியோ:
மாணவிகள் தாக்கப்பட்டதை அடுத்து இரு மாணவிகளின் பெற்றோர் இணைந்து வீடியோ ஒன்றை பதிவு செய்தனர். இந்து முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களான இவர்கள் பதிவு செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவின் பேரில், ரஜோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவிகளை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் ஆசிரியரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.
ரஜோரி மாவட்ட நீதிபதி வெளியிட்டுள்ள உத்தரவில், மாவட்டத்தின் கூடுதல் நீதிபதி கொட்ராண்கா மாணவிகள் உண்மையில் தாக்கப்பட்டனரா, எதற்காக தாக்கப்பட்டனர் என்ற காரணங்களை விசாரணை செய்வார் என குறிப்பிடப்பட்டு உள்ளது. முதலில் திலகம் அணிந்து வந்த இந்து மதத்தை சேர்ந்த மாணவி தாக்கப்பட்டார் என்ற வகையில் தகவல்கள் வெளியாகின.
விளக்கம்:
"திலகம் அணிந்தது மற்றும் நிகாப் (தலையில் முக்காடு) அணிந்து வந்ததற்கு எனது மகள் மற்றும் ஷகூரின் மகள் (தாக்கப்பட்ட மற்றொரு மாணவி) வகுப்பறையில் இன்று தாக்குதலுக்கு ஆளானதை போன்று நாளை மற்றொரு குழந்தையும் தாக்கப்படலாம். மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்," என மாணவியின் தந்தை அங்ரெஸ் சிங் தெரிவித்தார்.
"எனக்கு நீதி வேண்டும். இன்று எனது மகள் திலகம் இட்டு வந்ததற்காக தாக்கப்பட்டார். நாளை மற்றொருவருக்கும் இதே நிலை வரும். மேலும் ஏன நிகாப் அணிந்து இருக்கிறாய் என்ற கேள்வி எழும். இது சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலான செயல் ஆகும். இந்த பகுதியை உத்திர பிரதேசம், பீகார் மற்றும் கர்நாடகா போன்ற மாற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் ஏற்படுவதை போன்ற நிலைமை ஜம்மு காஷ்மீரில் நடக்க இங்குள்ள மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.