ஐசரி கணேஷ் சகோதரி வீட்டில் திருட்டு !! 15 லட்சம் ரூபாய் நகைகளை ஆட்டயப்போட்ட வேலைக்காரப் பெண் கைது !!

By Selvanayagam PFirst Published Jun 17, 2019, 9:44 AM IST
Highlights

பிரபல சினிமா தயாரிப்பாளரும்இ வேல்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவருமான  ஐசரி கணேஷ் சகோதரி வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

சென்னை மயிலாப்பூர் டாக்டர் ரங்கா தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி கமலக்கண்ணன். இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் சகோதரி. இவரது வீட்டில் தேனாம்பேட்டை லட்சுமி நகரை சேர்ந்த சுதா  என்பவர் கடந்த 2003ம்  ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார். 

வேலையில் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே வீட்டில் உள்ள வைர, தங்க நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக திருடி அவற்றை தனது கணவர் அன்பு என்பவரிடம் கொடுத்து அடகு வைத்தும் விற்றும்  சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களாக வேலைக்கார பெண் சுதா நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த அவர்கள் அவரை கண்காணித்து வந்துள்ளனர். 

கடந்த 12ம் தேதி வழக்கம் போல் வேலை முடிந்ததும் பீரோவில்  இருந்த நகைகளில் சிலவற்றை எடுத்து சென்றுள்ளார். சந்தேகத்தின்பேரில் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்த போது சில நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து வேலைக்கார பெண் சுதாவிடம், மகாலட்சுமி கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி நழுவியுள்ளார். அபிராமபுரம் காவல் நிலையத்தில் மகாலட்சுமி, வேலைக்கார பெண் சுதா மீது ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம்,  வைரம் மற்றும் பணத்தை திருடியதாக புகார் அளித்தார். 

இதையடுத்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் சுதா பணியில் சேர்ந்த நாள் முதல் சிறுக சிறுக பல லட்சம் மதிப்பிலான வைர நகை, தங்கம்,  பணத்தை திருடி அந்த நகைகளை தனது கணவர் அன்புவிடம் கொடுத்து நகைக்கடைகளில் விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. 

மேலும் சுதாவின் கணவர் அன்பு மூலம் வட்டிக்கு விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.இதையடுத்து போலீசார் அதிரடியாக வேலைக்கார பெண் சுதா மற்றும் அவரது கணவர் அன்பு ஆணியோரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 18 சவரன் மதிப்புள்ள தங்க நாணயங்கள் உட்பட பல லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

click me!