சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக உளவு துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மூன்று பேரின் வீடுகளில் போலீசார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வாள், இரும்பு குழாய்கள், வெடிபொருளாக பயன்படுத்தப்படும் ஆணிகள்,உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேனியில் திடீர் சோதனை
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள பாதர்கான் பாளையத்தைச் சேர்ந்த அகமதுமீரான்,இந்திரா நகரைச் சேர்ந்த அசாருதீன்,மற்றும் வடக்குத் தெருவை சேர்ந்த தர்வீஸ் மொகைதீன் ஆகியோரது வீடுகளில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும், அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவினை பெற்று வருவாய்த் துறையினரின் உதவியோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் ஏராளமான போலீசாருடன் சென்று மூன்று பேரின் வீடுகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சிக்கிய ஆயுதங்கள்
சுமார் மூன்று மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் முடிவில் இருவரின் வீட்டில் எந்தவித ஆயுதமும் கிடைக்கவில்லை என்றும், ஒருவரின் வீட்டில் மட்டும் 4 கத்திகள், 2 வாள்கள், வெடிபொருளாக பயன்படுத்தப்படும் ஆணிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 15 லட்ச ரூபாய் பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் வைத்திருந்ததாகவும் அதனை போலீசார் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆனால் போலீசார் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. உத்தமபாளையம் நகரின் முக்கிய வீதிகளில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் நகரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்