மனைவியின் தொலைபேசி அழைப்பை பதிவு செய்தால்... நீதிமன்றம் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Dec 13, 2021, 5:29 PM IST
Highlights

மனைவியின் தொலைபேசி அழைப்பை அவருக்கு தெரியாமல் ரகசியமாக பதிவு செய்வது தனியுரிமையை மீறும் செயல்

மனைவியின் தொலைபேசி அழைப்பை அவருக்கு தெரியாமல் ரகசியமாக பதிவு செய்வது தனியுரிமையை மீறும் செயல் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2011 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கருத்து வேற்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு மனைவியை விவகாரத்து செய்ய முடிவு செய்தார் கணவர். அதன்படி பதிண்டா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

மனுவில் மனைவிக்கும் தனக்கும் பல்வேறு விஷயங்களில் ஒத்துப் போகவில்லை என்றும் அவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின்போது, தனக்கும் தன் மனைவிக்கும் நடந்த உரையாடல் பதிவை நீதிமன்றத்தில் சிடியாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதை சமர்பிக்க, நிபந்தனைக்கு உட்பட்டு அந்த குடும்ப நல நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனால் மனமுடைந்த மனைவி, உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதில் தனது பேச்சை தனக்குத் தெரியாமல் ரகசியமாக பதிவு செய்து வெளியிடுவது தன் தனியுரிமையை மீறுவதாகவும் என்றும் அதை அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். ஆனால், இதில் தனியுரிமையை மீறுவது குறிந்து எந்த கேள்வியும் எழவில்லை என்றும் மனைவி கணவரிடம் கொடூரமாக நடந்து கொண்டதாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளதால் அந்த உரையாடல் பதிவுகள் அதை நிரூபிக்கும் முயற்சிதான் என்று கணவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி லிசா கில் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனைவிக்கு தெரியாமல் அவர் தொலைபேசி உரையாடலை ரகசியமாக பதிவு செய்வது அவருடைய தனியுரிமையை மீறும் செயல்தான் என்று கூறி, குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

click me!