
ஆற்காடு அருகே 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததால் அவர் 8 மாத கர்ப்பமானார். இது தொடர்பாக 2 பேர் போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதிஷ்(21), ஏழுமலை (41), இவர்கள் இருவரும் 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகிவந்தார்களாம். கடந்த ஏப்ரல் மாதம் அங்கு நடந்த விழாவின்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்றுள்ளார். மறைவான இடத்திற்கு சென்றபோது இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், நடந்த சம்பவம் குறித்து வெளியே செல்லக்கூடாது எனக்கூறி சிறுமியை மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, அங்கிருந்த மருத்துவர்கள் இதுகுறித்து மாவட்ட காப்பக அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, தன்னை சதிஷ் மற்றும் ஏழுமலை இருவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு மிரட்டி அனுப்பியதாக தெரிவித்தார். அதன்பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து சதிஷ் மற்றும் எழுமலையை நேற்றிரவு கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.