
திருவாலங்காடு அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கத்தியால் வெட்டிவிட்டு கள்ளக்காதலன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கள்ளக்காதல்
திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அருகே பாகசாலை காலனியை சேர்ந்தவர் ஏசு(42). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், ஏசுவுக்கும் அவரின் வீட்டு எதிரே வசிக்கும் முருகன் மனைவி ஜான்சி(30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
கத்தி குத்து
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஜான்சி அவரிடம் பேச மறுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஜான்சி திருவாலங்காட்டில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு தனது மாமனாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது எல்விபுரம் இடையே வழி மறித்த ஏசு தான் கையில் வைத்திருந்த கத்தியால் ஜான்சியின் முகம் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டினார்.
ரயிலில் பாய்ந்து தற்கொலை
இதில் படுகாயமடைந்த ஜான்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், போலீஸ் விசாரணைக்கு பயந்து ஏசு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.