ஆசிரியை கண்டித்ததை 30 ஆண்டுகள் நினைவில் வைத்திருந்த முன்னாள் மாணவர் ஆசிரியரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஏழு வயதில் ஆசிரியை செய்த செயலால் மிகவும் அவனமானம் அடைந்த சம்பவத்தை 30 ஆண்டுகளாக நினைவில் வைத்துக் கொண்டு கொலையாளி பட்டம் பெற்று இருக்கிறார் பெல்ஜியத்தை சேர்ந்த கண்டர் உவெண்ட்ஸ். பள்ளியில் பயிலும் போது ஆசிரியை செய்த செயல் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
1990-க்களில் நடந்த சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டு, அதே கோபத்துடன் 2020 ஆண்டில் ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கிறார் 37 வயதான கண்டர் உவெண்ட்ஸ். சம்பவத்தன்று இரவு ஆசிரியை வீட்டினுள் நுழைந்த கண்டர் கத்தியை கொண்டு 101 முறை ஆசிரியரை குத்தினார். இதில் காயமுற்ற ஆசிரியை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுய நினைவை இழந்து கீழே விழுந்து இறந்து போனார்.
உயிரிழக்கும் போது ஆசிரியை வெர்லிண்டனுக்கு 59 வயதாகும். 2020 ஆம் ஆண்டு அரங்கேறிய இந்த கொலை சம்பவத்தை பெல்ஜியம் காவல் துறை மிகத் தீவிரமாக விசாரணை செய்து வந்தது. கொலையாளியை பிடிக்க நூற்றுக்கும் அதிகமான டி.என்.ஏ. மாதிரிகளை காவல் துறை சேகரித்தது. சம்பவத்தன்று உயிரிழந்த வெர்லிண்டன் அருகில் அவரது பணப்பை கேட்பாரற்று கிடந்தது. அந்த வகையில், இந்த கொலை பணத்திற்காக நடைபெறவில்லை என்று மட்டும் தெளிவானது.
கொலை சம்பவம் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் உதவுமாறு உயிரிழந்த வெர்லிண்டனின் கணவர் பொது வெளியில் தகவல் கொடுத்து இருந்தார். எனினும், கொலை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில், கொலை சம்பவம் அரங்கேறி 16 மாதங்கள் கழித்து கொலையாளி உவெண்ட்ஸ் தான் ஆசிரியரை கொலை செய்ததாக தனது நண்பரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ந்து போன நண்பர் கொலை சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இவரின் புகாரை அடுத்து உவெண்ட்ஸ் கைது செய்யப்பட்டார். கைதுக்கு பின் போலீசார் நடத்திய விசாரணையில் தான், இவர் முன்னாள் மாணவர் என்பதும் 90-க்களில் பாதிக்கப்பட்ட காரணத்தால் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த கொலையை உவெண்ட்ஸ் செய்தார் என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட உவெண்ட்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
ஆசிரியரை மிகக் கொடூரமாக கொலை செய்த உவெண்ட்ஸ் வீடின்றி தவிப்போருக்கு உதவி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக பெல்ஜியன் செய்தி நிறுவனங்கள் தெரிவித்து இருக்கின்றன.